மக்கள் பாதிக்காத வகையில் புதிய விமான நிலையம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சட்டப்பேரவையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் பேசியதாவது: விவசாயிகள் அப்பகுதி மக்களுடைய உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் மதிப்பளித்து மாற்று இடத்தில் இந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  பரந்தூர் விமான நிலையம் விரிவாக்க திட்டத்தை கைவிடவேண்டும். மாற்று இடத்திற்கு அரசு பரிசீலிக்கவேண்டும். தளி ராமச்சந்திரன்(சிபிஐ): விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் பாதிக்காத வகையில் அரசு புறம்போக்கு நிலத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை அரசு எடுக்கவேண்டும்.வி.பி.நாகைமாலி (சிபிஎம்): விமான நிலையம் அந்த இடத்தில்தான் அமைய வேண்டுமென்று சொன்னால், அந்தப் பகுதி மக்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவேண்டும். ஜி.கே.மணி(பாமக): விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காக வகையில், பசுமை வளாக விமான நிலையம் எந்த அடிப்படையில் அமையப்போகிறது, இந்தத் திட்டம் எந்த அடிப்படையில், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதையெல்லாம் வெளிப்படுத்த வேண்டும். கு.செல்வபெருந்தகை(காங்கிரஸ்): ஏகனாபுரம் பகுதியில் தான் மக்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். ஏறத்தாழ 2000 வீடுகளுக்கு மேல் அப்பகுதியில் இருக்கின்றன, அப்பகுதி அடிபடுகிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கின்றது. ஆகவே அப்பகுதி மக்களின் மீது சிறப்பு கவனம் எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: பரந்தூர் பகுதியிலே இருக்கக்கூடிய விளைநிலங்களை நீரியல் அமைப்பு, கம்பன் கால்வாய் என்றுகூட ஒரு கால்வாய் இருக்கிறது. இந்தக் கம்பன் கால்வாய் மிக முக்கியமான ஒரு வடிநிலமாக இருக்கிறது. ஏகனபுரம் மக்கள் எங்களுடைய கிராமத்திற்கு ஏதாவது மாற்று வழியை நீங்கள் செய்து தர வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து முதல்வருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். முதல்வர், ஒரு மாற்று வழியை கேட்கிறார். இதுகுறித்து, ப்ராஜக்ட் மெனேஜ்மெண்ட் கன்சல்டுடன் சேர்ந்து இதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை நீங்கள் ஆராய்ந்து, feasibility study செய்து, அதற்கான மாற்று வழியிலே, அங்கிருக்கக்கூடிய அந்த co-ordinates-ஐ ஏதாவது செய்து, அங்கிருக்கக்கூடிய கிராமங்களை மாற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்குமென்றால், தொழில்நுட்ப அளவிலே சாத்தியக்கூறுகள் அமையும் என்று சொன்னால், அந்த சாத்தியக்கூறுகள் குறித்து நீங்கள் ஆராய வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டிருக்கிறார். எனவே, விவசாயிகளுடைய வாழ்வை, அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலே இந்த அரசு மிக கவனமாக இருக்கிறது. குறிப்பாக முதல்வர் அதில் கவனம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த விமான நிலையம் வருவது என்பது காலத்தின் தேவையாக இருக்கிறபோது, அங்கு இருக்கக்கூடியவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றக்கூடிய இந்தக் கரிசனத்தோடு, அந்தக் கடமை உணர்வோடு, முதல்வர் தொடர்ந்து எங்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். அவருடைய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அவ்வப்போது பெற்று, உங்கள் உணர்வுகளையும் உள்வாங்கி, இந்த விமான நிலையத்தை அமைக்கின்றபோது, அனைவரையும் உள்ளிணைத்து, அவர்களுக்கு பாதிப்புகள் இல்லாத வகையில் செய்வதற்கான முழு முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை