மக்கள் தொடர்பு திட்ட முகாம்மின்னணு கிராமமாக கோடகநல்லூர் மாற்றப்படும்கலெக்டர் கார்த்திகேயன் உறுதி

நெல்லை, ஏப். 20: நெல்லை கோடகநல்லூர் மின்னணு கிராமமாக மாற்றப்படும் என அங்கு நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார். நெல்லை தாலுகா, கோடகநல்லூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இம்முகாமில் மொத்தம் 192 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன. இவற்றில் 88 மனுக்கள் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் எஞ்சிய 104 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. முகாமில் சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் படங்களை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி மக்கள் இருப்பிடத்திற்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்து வருகிறது. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. இதனை மேலும் மேம்படுத்தும் விதமாக கோடகநல்லூர் கிராமத்தை ஒரு தன்னிறைவு பெற்ற மின்னணு கிராமமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்துள்ளது.

முதற் கட்டமாக கோடகநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 1050 வீடுகளிலுள்ள 3050 குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம், வயது, இனம், கல்வித் தகுதி, திருமண விபரங்கள், பார்க்கும் வேலையின் விபரம், வீட்டிலுள்ள கால்நடை விபரங்கள் போன்ற அடிப்படையிலான விபரங்களை சேகரித்து, அந்த விவரங்களின் அடிப்படையில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களை அவர்களிடம் நேரடியாக சேர்ப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஒரு தன்னிறைவு பெற்ற கிராமம் என்ற பார்வையில் பொதுமக்களின் உடல் நலத்தை பேணி காக்கும் வகையில் அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை, கண் பரிசோதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை மூலம் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. கால்நடைத் துறை சார்பில் கால் நடைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாமும் நடந்தது.

மின்னணு கிராமம் என்ற வகையில் கோடகநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 50 சில்லறை வணிக கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது. மகளிருக்கான மின்னணு மற்றும் பொருளாதார அறிவினை மேம்படுத்தும் விதமாக கைபேசி செயலிக்கான பயிற்சிகள் நடந்தது. கிராம நூலகத்திற்கு 2 கணினி வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இப்பகுதி இளைஞர்கள் இந்த நூலகத்திலுள்ள
மின்னணு வசதியை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சீருடை பணிகளுக்கான உடற்பயிற்சி மற்றும் எழுத்துத் தேர்விற்கான பயிற்சி வகுப்பும் முன்னாள் ராணுவ வீரர்களால் இலவசமாக இக்கிராமத்தில் நடத்தப்படுகிறது.

மேலும் ‘பசுமை கிராமம்’ என்ற திட்டத்தின் கீழ் 100 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளதோடு ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மஞச்பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். வருகிற ஜூன் 30ம் தேதி ‘கோடகநல்லூர் ‘ஒரு தன்னிறைவு பெற்ற மின்னணு கிராமம்’ என்ற பெருமையை பெறும் முதல் கிராமமாக இருக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முகாமில் 146 பயனாளிகளுக்கு ரூ.27.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், இளைஞர்களுக்கு வழிகாட்டு கையேடுகளையும் கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆணையாளர் சுகன்யா, நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர், தேசிய தகவலியல் மைய மேலாளர் ஆறுமுகநயினார், பாப்பாக்குடி யூனியன் சேர்மன் பூங்கோதை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சத்தியவாணிமுத்து, கோடகநல்லூர் ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், நெல்லை தாசில்தார் வைகுண்டம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லெட்சுமி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

3 கட்ட செயல்பாடுகள்
நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மேலும் பேசுகையில் ‘‘மக்களை நோக்கி அரசுத் துறைகள் என்பதை அடிப்படையாக கொண்டு, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள ‘கோடகநல்லூர் – ஒரு தன்னிறைவு பெற்ற மின்னணு கிராமம்” என்ற இப்புதிய முயற்சி மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. கிராமத்திலுள்ள பெரும்பாலான தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கான பல்வேறு அரசு நலத் திட்டத்திங்களை உரியமுறையில் கொண்டு சேர்ப்பது, இளைஞர்களுக்குத் தேவையான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் என முதற்கட்ட முயற்சிகள், இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற மே 19ம் தேதி 2ம் கட்ட செயல்பாடுகளும், ஜூன் 19ம் தேதி 3ம் கட்ட செயல்பாடுகளும் நடைமுறைபடுத்தப்படும்’’ என்றார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்