மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் குமரி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை: கண்காணிப்பு கேமரா வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டது

 

நாகர்கோவில், ஜன.30: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றதையொட்டி குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் நேற்று மனு அளிக்க வந்தவர்களிடம் தீவிர சோதனை நடத்தினர். நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களுடன் வருகை தருவது வழக்கம். இலவச வீட்டுமனை பட்டா கேட்டும், மானியங்கள், நலத்திட்ட உதவிகள் கேட்டும் மனுக்கள் அளிக்கின்றனர்.

மேலும் சொத்து பிரச்னைகள் தொடர்பாகவும், சிவில், கிரிமினல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனுக்களுடன் மக்கள் வருகை தருகின்றனர். நேற்று காலையில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் மக்கள் மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் வருகை தந்திருந்தனர். மேலும் அங்கு வருபவர்களிடம் போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலிலேயே தீவிர சோதனை நடத்தினர். மனு அளிக்க வருகின்றவர் உடமைகளும் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மனுக்கள் பெறுகின்ற மாற்றுத்திறனாளிகள் அலுவலக லூயி பிரைலி அரங்கிலும் பொதுமக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

மனுக்களுடன் வருகின்றவர்கள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் அமர்ந்திருக்கின்ற பகுதிக்கு அருகே வைத்து ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவகாரம் அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் மனு அளிக்க வருகின்றவர்கள் மண்ணெண்ணெய், பெட்ரோல் பாட்டில்கள், தீப்பெட்டி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏதும் எடுத்துவந்துள்ளனரா என்றும் போலீசார் பரிசோதித்தனர்.

கலெக்டர் அலுவலக பிரதான வாசல், கூடுதல் கட்டிட பகுதிகளிலும் இதற்காக போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்திய வாகனம் ஒன்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக பகுதிகளில் மனு அளிக்க வருகின்றவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து