மக்களின் போக்குவரத்து தேவையினை பூர்த்தி செய்கின்ற வகையில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை கூட்டம் இன்று (29.12.2021) பதிவு செய்யப்பட்ட 65 பேரவை / தொழிற்சங்க பிரநிதிகளுடன் நான்கரை மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரநிதிகள், மகளிர், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகைக்கான பேட்டாவினை ஓட்டுநர் / நடத்துநர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட முக்கியமான 21 கோரிக்கைகளை முன்வைத்தனர். தமிழக அரசு மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக ரூ.1,450 கோடி வழங்கியுள்ளது. பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் மற்றும் முதியோர்களிடம் நல்ல முறையில் நடத்துகொள்ள ஓட்டுநர் / நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மேலும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுடைய அனைத்து கோரிக்கைகளும், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர்களுடன் விரிவாக ஆலோசனை செய்து, தமிழ்நாடு முதலமைச்சரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது 4,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொது மக்களின் போக்குவரத்து தேவையினை பூர்த்தி செய்கின்ற வகையில், தற்போது ஏறத்தாழ 20,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும், புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு படிப்படியாக பழைய பேருந்துகள் கழிவு செய்யப்படும். போக்குவரத்துக் கழகமானது எந்தவித இலாப நோக்கமின்றி பொதுமக்களின் தேவையினை பூர்த்தி செய்கின்ற வகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக, 20,000 பேருந்துகள் சிறப்பாக இயக்கப்பட்டது போன்று, வரும் பொங்கல் திருநாளிலும் பொதுமக்களின் தேவையினை பூர்த்தி செய்கின்ற வகையில் பேருந்துகள் இயக்கிட அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கத்தின் போது தவறுகள் ஏதும் ஏற்படின் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசு விதித்துள்ள சட்ட திட்டங்களை பின்பற்றி இயக்கிட ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உரிமைதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்ட திட்டங்களை மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கொரோனா காலக்கட்டத்திலும் குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றித்தர வேண்டும் என்பதற்காக இந்த பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றள்ளது. இதுவே தொழிலாளர்கள் மீது அரசு கொண்டுள்ள அக்கறைக்கு சான்றாகும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்….

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

தமிழகத்தில் ஜூலை 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு