மகிழ்ச்சி மத்தாப்பூ

தமிழகத்தில் கடைசியாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சி பட்டியலில் இணைந்த ஊர் சிவகாசி. நடந்து முடிந்த தீபாவளி பண்டிகைக்காக இந்த ஊரில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தான் இந்தியா முழுவதும் ரூ.4,500 கோடிக்கு விற்பனையாகி உள்ளன. ‘கந்தக பூமி’ என்றழைக்கப்பட்ட சிவகாசியில் விவசாயம் உள்பட எந்த தொழிலுமே செய்ய முடியாத நிலையில், மக்கள் வாழ்வாதாரத்தால் மிகவும் அவதியடைந்து வந்தனர். பிழைக்கத் தொழில் வேண்டுமே என்பதற்காக, கடந்த 1928ம் ஆண்டு 4 ஆலைகளுடன் பட்டாசு தயாரிப்பு சிறிய அளவில் துவங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இப்பகுதியில் உள்ளன. நேரடியாக 5 லட்சம், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் 95 சதவீத பட்டாசு தேவையை சிவகாசியே பூர்த்தி செய்கிறது. தீபாவளி பட்டாசுக்கான ஆர்டர்களை மார்ச் மாதம் முதலே வடமாநில வியாபாரிகள் கொடுக்கத் தொடங்கி விடுவர். இதுதவிர ஜனவரி முதல் ஜூலை வரை திருமணம் உள்ளிட்ட விசேஷ வைபவங்களுக்கான ஆர்டர்களும் அதிகளவு தருவது வழக்கம்.கொரோனாவால் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். இது ஒருபுறமிருக்க, பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் கெமிக்கலை பயன்படுத்தக்கூடாது. சரவெடிகளை உற்பத்தி செய்யக்கூடாது. பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றமும் அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து பட்டாசுகள் தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டது.  பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனாலும், வெளிமாநில ஆர்டர்கள் எதிர்பார்த்தது போல வரவில்லை. இதையடுத்து பட்டாசு உரிமையாளர்கள் சங்கத்தினர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், வெளிமாநில முதல்வர்களிடம் பட்டாசு விற்பனை தொடர்பாக பேசும்படி வலியுறுத்தினர். இக்கோரிக்கையைினை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தார். இதையடுத்து பட்டாசு ஆர்டர்கள் சூடு பிடிக்கத் தொடங்கின. ஆர்டர்களும் குவிந்தன. ஆனாலும், பட்டாசு உரிமையாளர்களால், கடந்தாண்டை போல அதிகளவு பட்டாசுகளை தயாரிக்க முடியவில்லை. நடப்பாண்டில் தீபாவளிக்கு சுமார் 60 – 70 சதவீத பட்டாசுகளே தயாரிக்கப்பட்டன. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மூலப்பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்திருந்தன. பேரியம் நைட்ரேட் கெமிக்கலை பயன்படுத்த தடை விதிப்பால், குறிப்பிட்ட வகை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்பட்டன. படிப்படியாக வெளிமாநில ஆர்டர்களும் அதிகரிக்கத் தொடங்கின. தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை என்ற டெல்லி அரசின் உத்தரவையும் மீறி, அங்குள்ள மக்களும் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அங்கேயே இப்படி என்றால், தமிழகத்தில் கேட்கவா வேண்டும். இங்கு மட்டும் சுமார் ரூ.500 கோடிக்கு பட்டாசு விற்பனையாகி உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் ரூ.150 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகி பட்டையை கிளப்பி உள்ளது. தீபாவளி மட்டுமல்ல… இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு விற்பனையாகி உள்ளது. கொரோனா, அதிமுக ஆட்சியின் அக்கறையின்மை உட்பட பல்வேறு காரணங்களால், நலிவை நோக்கி நகர்ந்த பட்டாசு தொழில், ராக்கெட்டை போல விண்ணை நோக்கி உயர்ந்துள்ளது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பட்டாசு தொழிலை பாதுகாத்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்….

Related posts

தாய் தமிழின் புகழ் மகுடம்

எப்படி சாத்தியமாகும்?

பிடி இறுகுகிறது