மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் நேற்று இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இன்று காலை சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கோயில் நடை திறந்து சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கத்திற்கு பக்தர்கள் தங்களது கைகளால் பால், தயிர், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவகை திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை துவங்கி அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி கோயில் பிரகாரங்களில் இரவு முழுவதும் கண்விழித்து விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் விடிய விடிய நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் பங்கேற்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். சிவராத்திரி உற்சவத்தையொட்டி நேற்று இரவில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நான்குரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த சாதுக்களும், பக்தர்களும் அதிகாலை கங்கை நீருடன் மூன்றாம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து இன்று காலை சுவாமி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சர்வ அலங்காரத்தில் கோயில் கிழக்கு நுழைவு வாயிலில் அமைந்துள்ள தேரடிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கோயில் இணை கமிஷனர் தனபால் தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். விநாயகர், முருகன் எழுந்தருளிய சிறிய தேர்கள் முன்செல்ல தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சிவ சிவா கோஷத்துடன் சுவாமி அம்பாள் தேரை வடம்பிடித்து நான்குரத வீதிகளில் இழுத்து வந்தனர். ரதவீதியில் ஏராளமான பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து சுவாமி அம்பாளை வழிபட்டனர்….

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!