மகளை சட்டக்கல்லூரியில் சேர்க்க சென்றபோது கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்

போளூர், டிச.27: போளூர் அருகே மகளை சட்டக்கல்லூரியில்சேர்க்க சென்ற போது கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர். கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் சுலைமான். இவரது இளையமகளுக்கு திருப்பதியில் உள்ள சட்டகல்லுரியில் பயில இடம் கிடைத்தது. இந்நிலையில், மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சுலைமான், அவரது மனைவி, மற்றும் 2 மகள்கள் வந்துள்ளனர். அங்கிருந்து வாடகை கார் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டனர். காரை ராஜ்வேல்பாண்டி(44) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்நிலையில், நேற்று போளூர் அடுத்த முருகாபாடி கூட்ரோடில் கார் வந்து கொண்டிருந்தபோது வேலூரிலிருந்து போளூர் நோக்கி அடையாளம் தெரியாத லாரி மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. கார் மீது லாரி மோதி விடுமோ என்ற அச்சத்தில் காரை டிரைவர் இடது பக்கமாக திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காரின் அனைத்து கதவுகளும் திடீரென திறந்து கொண்டன. இதனால் காரில் இருந்த 5 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து டிரைவர் ராஜ்வேல்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி