மகளிர் சுய உதவிக்குழு, குழுக்கூட்டமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருவாரூர், ஜூலை 2: திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் குழுக்கூட்டமைப்புகள் மணிமேகலை விருதிற்கு வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் குழுக்கூட்டமைப்புகளிடமிருந்து 2023-24ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்டத்தில் சிறந்த முறையில் குழுக்கூட்டங்கள், நிர்வாகிகள் சுழற்சி முறை மாற்றம், வரவு-செலவு நிதி விவரம், மேற்கொள்ளும் தொழில் விபரம், தரம் மற்றும் தணிக்கை விபரம், வங்கிக்கடன் இணைப்பு மற்றும் திருப்பம், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி விபரம், விழிப்புணர்வு விபரங்கள் சமுதாய மேம்பாடு பணியில் ஈடுபட்ட விபரம், கிராம சபா பங்கேற்பு, மாற்றுதிறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு மாநில, மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் வரும் 5ம் தேதி வரையில் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம்.

5ம் தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது. எனவே தகுதியுள்ள குழுக்கள் மற்றும் கூட்டமை ப்புகள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்