மகத்தான புண்ணியம் தரும் மஹாளய பட்சம்

மஹாளயபட்சம் 11-9-2022 முதல் 26-9-2022 வரைஒவ்வொரு அமாவாசையன்றும் நாம் நம்முடைய முன்னோர்களை நினைத்து எள்ளும் நீரும் இறைத்து வணங்கி அவர்கள் ஆசிர்வாதத்தைப் பெறுகிறோம். இந்த வழிபாட்டினால் அவர்கள் திருப்தியும், மன நிறைவும், மகிழ்ச்சியும் அடைகிறார்கள். மனம் குளிர்ந்து அவர்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான கஷ்டங்களிலிருந்து காப்பாற்றிவிடுகிறது. ஆதலால்தான், பித்ரு பூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்று பெரியவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ஒவ்வொரு அமாவாசையன்றும் முன்னோர்கள் வழிபாட்டை செய்தாலும், வருடத்திற்கு 15 நாட்கள் முழுமையாக இந்த வழிபாட்டிற்கு என்றே ஒதுக்கி இருக்கிறார்கள். அதற்கு `மஹாளயபட்சம்’ என்று பெயர். இந்த மஹாளயபட்சத்தின் சிறப்பு பற்றியும், அப்பொழுது செய்ய வேண்டிய பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பற்றியும், அதன் பலன்களைப் பற்றியும் முப்பது முத்துக்களாகக் காண்போம்.*மஹாளயம் என்றால் என்ன?சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை எனப்படும். சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் சொல்வார்கள். ஜாதக ரீதியாக இந்த இரண்டும் பிரதானமானவை. இவர்கள் நிலையை வைத்துதான் ஒருவருடைய வாழ்க்கை நிலையைச் சொல்ல வேண்டும். சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் சொல்வார்கள். பிறந்த ஜாதகத்தை (லக்கினம்) சூரியன் நிலை தீர்மானிக்கிறது. நடக்கும் நிகழ்வுகளை சந்திரன் (ராசி) தீர்மானிக்கிறார். இவர்கள் இணையும் நாளில் (அமாவாசை) நம் முன்னோர்களை நினைக்க வேண்டும். அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் அதி முக்கியமானவை. 1. ஆடி அமாவாசை, 2 தை அமாவாசை, 3. மஹாளய அமாவாசை. ஆடி அமாவாசை, தை அமாவாசை இரண்டும் முறையே தட்சிணாயண தொடக்கத்திலும், உத்தராயண தொடக்கத்திலும் வரும் அமா வாசைகள். இந்த அமாவாசைகள் இரண்டுக்கும் நடுவே உள்ள மஹாளய அமாவாசை. முக்கியமானது. ஏதோ ஒரு காரணத்தினால் அமாவாசையை  மறந்தாலும் மகாளயத்தை மறக்கவே கூடாது. அதனால்தான் மறந்தவனுக்கு மஹாளயம் என்று ஒரு பழமொழியே சொல்லியிருக்கிறார்கள்.*மஹாளயத்தின் அடிப்படை என்ன?‘மஹாளயம்’ என்றால் `பெரிய கூட்டம் என்று பொருள்’. மஹாளயத்தின் சிறப்பிற்குக் காரணம் இருக்கிறது. ஆடி அமாவாசைக்கு பித்ருக்கள் உலகத்திலிருந்து  இந்த நில உலகத்திற்கு வருகின்றார்கள். பித்ருக்கள் உலகம் என்பது உடலை விட்ட ஆன்மாக்கள்  தங்களுக்கு வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும். பித்ரு லோகம் எங்கே இருக்கிறது என்பது ஒரு கேள்வி? பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும் நடுவில் இருப்பதாக பாகவத புராணம்(காண்டம்5, அத்தியாயம் 24) கூறுகிறது. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் வீடு தேடி வரும்  காலமே மஹாளய பட்சம். “பட்சம்” என்றால் பதினைந்து நாள்கள். மறைந்த நம் முன்னோர் பித்ருலோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாள்கள் நம்மோடு தங்குகிறார்கள் மகாளய பட்சம், இந்த ஆண்டு 11.9.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் சிறப்பு, பிதுர்காரகனான சூரியனுக்குரிய ஞாயிறு அன்று மஹாளயம் துவங்குகிறது.*பித்ருக்கள் யார்? தமிழிலக்கிய மரபு என்பது தமிழ் வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்களின் மரபு. அதில் முன்னோர்களான பிதுரர்களை, ‘‘தென்புலத்தார்” என்று அழகாக அழைக்கின்றார்கள். ஒருவன் இறந்தால் (பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும்) ஆன்மாதான் உடலை விட்டுவிட்டு போகும். அதுவே வேறொரு உடலைத் தேடும்.இதை திருவள்ளுவரும், குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றேஉடம்போடு உயிரிடை நட்பு (அதிகாரம்: நிலையாமை குறள் எண்:338) என்ற குறளில் அழகாகச் சொல்கிறார். உடல் நிலைப்பது உயிர் உள்ள வரையில் தான்; இரண்டும் எதற்கும் கட்டுப்பட்டதுமல்ல; அவற்றின் நட்பும் நீடித்ததல்ல. உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய – பாவ கர்ம வினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, பாவ – புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்ரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருக்கும். அந்த உலகத்தில் இருப்பவர்கள் பிதுரர்கள். *பிதுர்கடன்?

நம்மைப் போன்று, இல்லறத்தில் இருப்பவர்களுக்கு, நான்கு கடன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தேவ கடன், ரிஷி கடன், பூத கடன், பிதுர் கடன்… ஒரு இல்லறத்தான் முக்கியக்  கடமையாகப் பித்ருக்களை உபசரிக்கக் கூடிய சடங்கு சொல்லப்பட்டிருக்கிறது.தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43)
இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம். அதனால்தான் திருவள்ளுவர் முதல் வழிபாடாக தென்புலத்தார் வழிபாட்டை வைத்தார். தெய்வ வழிபாட்டுக்கு சற்று குறைவு வந்தாலும், முன்னோர்கள் வழிபாட்டில் எந்த குறையும் இருக்கக்கூடாது. அது மிகுந்த சிரத்தையுடனும், கவனத்தோடும் செய்யப்பட வேண்டும் என்பதால்தான் அந்த வழிபாட்டுக்கு சிரார்த்தம் என்று பெயர் வைத்தார்கள்.

*மறுபிறவி எடுத்தவர்களுக்கு ஏன் செய்ய வேண்டும்?இப்பொழுது ஒரு கேள்வி வரும். எப்போதோ இறந்துபோன முன்னோர்கள் இன்னுமா மறுபிறவி எடுக்காமல் பிதுர் உலகத்தில் இருப்பார்கள்? அவர்கள் எப்போதோ மறுபிறவி எடுத்து இருப்பார்களே? பிறகு எதற்கு அவர்களுக்கு இந்த தில தர்ப்பணம் செய்யவேண்டும்? இதற்கு நம்முடைய ஆன்றோர்கள் சொன்ன பதில் இதுதான்.1.அவர்கள் மறுபிறவிகள் எடுத்தாலும், அல்லது முக்தியை அடைந்தாலும், அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும், நம் பித்ரு பூஜைகள் ஏதோ ஒருவகையில், பித்ரு தேவதைகளின் மூலம், அவர்களைச் சென்றடைகின்றன. மறுபிறவி பெற்ற பின்னும் அது அவர்களுக்குப்  பயன்படுகிறது. 2.இந்த பூஜையின் பலன் அவர்களை சென்றடையவில்லை என்றாலும், அவர்களை நினைத்துச் செய்யும் நன்றி உணர்வால், நமக்கு  ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.3.நமது முன்னோர்களில் யார் யார் பிறவா நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என  ஆன்றோர்கள், ரிஷிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். நாம் செய்யும் பித்ரு பூஜை வீணாவதில்லை.*இதை விட எளிய வழிபாடு இல்லை அவர்களுக்கு எதுவும் முக்கியமாக வேண்டாம். நாம்  தருகின்ற எள்ளும் நீரும் அவர்களுக்கு மனநிறைவைத் தருகின்றன. இதற்காக ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பிதுர்க்கடன் சிரத்தையோடு செய்வதன் மூலமாக அவர்களுக்குத் தாகம், பசி நீங்கி ஆசீர்வாதங்களை அளிக்கிறார்கள். சந்தோசமாக நம்மை வாழ்த்துகின்ற அந்த வாழ்த்தினால் நம்முடைய தோஷங்கள் நீங்கி மிக சவுகரியமான வாழ்க்கையை அடைகின்றோம்.*யார் யார் செய்ய வேண்டும்?  1. தாய் – தந்தை இல்லாத ஆண்கள் அவசியம்  செய்ய வேண்டும். 2. குழந்தை இல்லாத, அதே சமயத்தில் கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தைக்  கடைப்பிடிக்க வேண்டும். சங்க காலத்தில்  பெண்கள் செய்த நீத்தார் வழிபாடு பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. 3. திருமணம் ஆன பின், தன்னுடைய தாய் தந்தையர் மறைந்து விட்டால், அவர்களை  பெண் வணங்கலாம் 4. பெண்கள்  கோயிலுக்குச் சென்று தானம் செய்யலாம். வீட்டில் பெரியவர்களை அழைத்து அன்னமிட்டு மரியாதை செய்யலாம்.  *எப்படிச் செய்ய வேண்டும்?அன்றைக்கு காலையில் நீராடி பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்கள் பெயரையும் கோத்ரத்தையும் சொல்லி, கோத்ரம் இல்லா விட்டால் முன்னோர் பெயரையும் உறவையும் சொல்லி தாய் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், தந்தை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என மூன்று தலைமுறையினர்கள், பங்காளிகள் (ஞாதிகள்), முதலியோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதில் “யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண : தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை: குசோ தகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று ஒரு மந்திரம் வரும். தர்ப்பணம் செய்ய சந்ததி  இல்லாதவர்களுக்கும் சேர்த்து எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.*எங்கே செய்வது சிறப்பு?சமுத்திரக் கரைகளிலும் நதிகளிலும் குளக்கரைகளிலும் ஆறுகளிலும் இந்த ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்வது நல்லது. பொதுவாக முன்னோர்களுக்கு செய்யவேண்டிய சடங்குகளை நீர்நிலைகள் உள்ள இடங்களில் செய்வது நல்லது. புண்ணிய நதித் தீரத்தில் தர்ப்பணம் செய்வது உத்தமமானது. சில கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் இதற்கான வசதிகள் உண்டு. திருவெண்காடு தலத்தில் (புதன் தலத்தில்)  தர்ப்பணம் செய்வதன் மூலமாக 21 தலைமுறைகள் உய்வுபெறும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. திருவெண்காடு ருத்ர கயா என்று வழங்கப்படுகிறது. சென்னைக்கு அருகே திருவள்ளூரில் உள்ள திருக்குளம் ஹ்ருத்தாபனாசினி மிகவும் புனிதமானதாகும் என்பதை கீழுள்ள ஸமஸ்கிருத பாடல் மூலம் அறியலாம்.தர்சநாத் ஸ்பர்சநாத் ஸ்னானாத், ஸ்த்யோ ஹ்ருத்தாபனாஸ்நாத்அதோ ஸர்வேஷு லோகேஷு, நம்ந ஹ்ருத்தாபனாஸநாத்.இத்திருக்குளத்தைப் பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அனைத்து வேதனைகளும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும். கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கேயும் அமாவாசை மற்றும் மகாளயகாலங்களில் ஏராளமானவர்கள் வந்து வழிபாடு நடத்துகின்றனர். இதேபோல எண்ணற்ற திருக்கோயில்களும் புண்ணிய நதிகளும் உள்ளன.*வீட்டில் செய்யலாமா?தாராளமாக வீட்டில் செய்யலாம். அதில் ஒரு தவறும் இல்லை. சிரார்த்தம் செய்து ‘‘தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ” எனக்கூறி வழிபடவேண்டும். வீட்டிலேயே கங்கையையும் காவிரியையும் நினைத்து தர்ப்பணம் செய்துவிட்டு அந்த தர்ப்பணநீரை, கால் படாத இடத்தில் சேர்த்துவிடலாம். அல்லது அருகாமையில் உள்ள நீர்நிலைகளிலும் கொண்டு போய் சேர்க்கலாம். பிதுர் பூஜை செய்யாமல் தெய்வபூஜை செய்வதற்கு அனுமதி இல்லை. எனவே அன்று மாலையில் பிதுர் கடன் முடித்த பிறகு கோயிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றுவது நல்லது. அமாவாசை அன்று காகத்திற்கும் பசுவிற்கும் உணவு வழங்குவது சிறப் பானது. சிரார்த்தம், தர்ப்பணம் செய்வதற்கு உசித காலம் 10-30 மணியிலிருந்து 3-30  மணிக்குள் செய்யலாம்.பட்ச மஹாளய தர்ப்பணம் செய்பவர் அமாவாசை தர்ப்பணத்திற்கு பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும். *பித்ரு தோஷம் ஏன் வருகிறது?செய்ய விதிக்கப்பட்ட ஒரு வேலையைச் செய்யாமல் விட்டுவிட்டால் அது குற்றம். அந்தக் குற்றம் நமக்கு ஏதேனும் ஒருவிதத்தில் தண்ட னையாக மாறும். உதாரணமாக ஒரு பிள்ளை, தன் தாய் தந்தையைக் காப்பாற்ற வேண்டும். அது அவர் கடமை. அப்படிச் செய்யாவிட்டால் அது குற்றம். அதைப்போல ஒரு தந்தை, தான் பெற்ற பிள்ளையைக் காப்பாற்றவேண்டும். செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் குற்றம். அதைப்போலவே வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு வழிவழியாக நாம் செய்யவேண்டிய ஒரு சிறு வழிபாட்டை செய்யாமல் விட்டால் அது குற்றம். அந்த குற்றமே பிதுர்தோஷம் எனப்படுவது. அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம்.தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். பித்ரு தோஷம் வேறு பல காரணங்களாலும் வரும்.1.கருச்சிதைவு2.பெற்றோர்களை இறுதிக் காலத்தில் கவனிக்காதது போன்ற சில காரணங்களும் பிதுர்தோஷம் வரும் வாய்ப்பைத் தருகிறது.*எப்படி வேலை செய்யும்? கடவுள் நமக்கு தரும் வரங்களையே பித்துருக்களின் சாபம் தடுத்து நிறுத்தும் தன்மையுடையது. பொதுவாகவே, நம் குடும்பத்தில் நடைபெறும் விரும்பத்தகாத அல்லது திரும்பத் திரும்ப நடைபெறுகின்ற சில எதிர்மறை விஷயங்களை வைத்துக்கொண்டு, நாம் பிதுர் தோஷத்தை கண்டுபிடித்து விடலாம். இது ஒரு சங்கிலித் தொடர்பு என்பதால், நாம் இப்பொழுது, சரியாகச்  செய்தாலும், விட்டகுறை தொட்ட குறை என்பதாகத் தொடரும். திருமணத் தடைகள், தாமதத் திருமணம், திருமணம் நடந்தாலும் விவாகரத்து, கடுமையான உடல் உபாதைகள், மனநோய், வியாபாரத்தில் நட்டங்கள், காரண மில்லாமல் குடும்பத்தில் மன நிம்மதிக் குறைவு ஏற்படுதல், குடும்ப உறுப்பினர்களிடையே எப்பொழுதும் சண்டை சச்சரவு, சந்ததி விருத்தி இல்லாமலிருப்பது, விபத்துக்கள் முதலிய சில தொடர் நிகழ்வுகள் பிதுர்தோஷத்தைச்சுட்டிக்காட்டும்.*பரிகாரம் ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம். சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யவும். இந்த அபிஷேகம் அமாவாசையன்று செய்யவும். இந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் பித்ருதோஷம் விலகும். சிவன்கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் 100 கிராம் பச்சரிசி, அகத்திக்கீரை, 50 கி கறுப்பு எள், 100 கி வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டிற்கு கொடுக்க பித்ரு தோஷம் நீங்கும். தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும். இதனால் பித்ருதோஷம் முழுமையாக நீங்கும்.*எந்த நாளுக்கு என்ன பலன்?மஹாளய சிரார்த்த வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. வைத்தினாத தீக்ஷிதீயம் என்ற நூலில் சிரார்த்த காண்டம் உத்தர பாகம் 225ம் பக்கத்தில் பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. முதல்நாள் – பிரதமை: பணம் சேரும்இரண்டாம் நாள் – துவிதியை: நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.மூன்றாம் நாள் – திருதியை: நினைத்தது நிறைவேறும்.நான்காம் நாள் – சதுர்த்தி: சத்ரு பயம் நீங்கும்.ஐந்தாம் நாள் – பஞ்சமி: செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துகள் பெருகும்.ஆறாம் நாள் – சஷ்டி: புகழும் கீர்த்தியும் உண்டாகும்.ஏழாம் நாள் – சப்தமி: பதவி உயர்வுகளில் தடைகள் நீங்கும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும், தலைமைப் பதவி தேடி வரும்.எட்டாம் நாள் – அஷ்டமி: அறிவாற்றல் கிடைக்கும்.ஒன்பதாம் நாள் – நவமி: திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.பத்தாம் நாள் – தசமி: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும், விருப்பங்கள் பூர்த்தியாகும்.பதினோராம் நாள் – ஏகாதசி: படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி உண்டாகும்.பன்னிரண்டாம் நாள் – துவாதசி: விலையுயர்ந்த ஆடை-ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.பதின்மூன்றாம் நாள் – திரயோதசி: பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், நல்ல வேலை – தொழில் அமையும்.பதின்னான்காம் நாள் – சதுர்த்தசி: ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்கும், எதிர்கால தலைமுறைக்கு நன்மை கிடைக்கும்.பதினைந்தாம் நாள் – மஹாளய அமாவாசை: முன்னோர் ஆசியால் மேற்சொன்ன அனைத்து பலன்களும் ஸித்திக்கும்.* அமாவாசை, மஹாளயம் சுபதினங்களா? அசுப தினங்களா?முன்னோர்களுக்கு செய்யும் வழிபாட்டை நாம் அசுப வழிபாடு என்று நினைக்கிறோம். அது தவறு. பொதுவாக நல்ல நாட்களை இரண்டாகப் பிரித்து  வைத்திருக்கிறார்கள். ஒன்று சுபதினம். இன்னொன்று புண்ணிய தினம். அமாவாசை போன்ற நீத்தார் கடன் நிறைவேற்றும் நாள்களை புண்ணிய தினம் என்று சொல்லுவார்கள். சங்கல்ப மந்திரத்தில், உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா -மஹாளய புண்ய காலே, தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே. என்று துவங்குவார்கள். நுட்பமாகக் கவனித்தால் புரோகிதர் இந்த நல்ல நாட்களை வித்தியாசப்படுத்தி சொல்வது தெரியும். எனவே அமாவாசை, மகாளய காலங்கள் புண்ணிய காலங்களே. அசுப காலங்கள் அல்ல.நம்முடைய தமிழக கிராம மக்கள், அன்று காலை விரதமிருந்து, அமாவாசை படையல் போட்டு, அதற்குப் பிறகு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் இதிலிருந்து அவர்கள் விலகுவதில்லை. இது நம் ரத்தத்தில் ஊறிய நீத்தார் கடன் சிறப்பை உணர்த்துகிறது. எனவே, ‘‘நீத்தார்கடன்” ஆற்ற வேண்டிய பெருமையைப் புரிந்துகொண்டு, நம் முன்னோர்களுக்கு, வருகின்ற மகாளய பட்சத்தில் (11.9.2022 முதல் 26.9.2022 வரை) ஒவ்வொருவரும் நீர்க்கடன் செய்ய வேண்டும்.*மஹாளயத்தில் செய்ய முடியாவிட்டால் வேறு என்று செய்வது?மஹாளயத்திலும் அமாவாசையிலும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நிற்கிறார்கள். தங்களுக்குத் தரப்படும் தர்ப்பணத்தை (எள் கலந்த தண்ணீரை) பெற்றுக் கொண்டு நல்லாசி வழங்குகிறார்கள். அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கான வழிபாடு இல்லை எனில் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். மஹாளய பட்சத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் பித்ரு சிரார்த்தமானது, கயா சிரார்த்தத்திற்கு சமமான பலன் என்றும், மஹா பரணியை 5 மடங்கு பலன் அதிகமாகவும், வ்யதீபாதம் 10 பங்கு அதிகமாகவும் மத்யாஷ்டமி 20 மடங்கு அதிகமாகவும், த்வாதசி புண்ய காலத்தை 100 மடங்கு அதிக மாகவும் மஹாளய அமாவாசையை 1000 மடங்கு அதிகமாகவும் புண்ணியத்தை கொடுக்கக் கூடியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தினால், மஹாளய பட்சத்தில், மஹாளய சிரார்த்தம் செய்ய முடியாவிடில், பிறகு அடுத்த பஞ்சமிக்குள் செய்வதாய் இருந்தால், பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி, சதுர்த்தசி, வெள்ளிக்கிழமை கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்….

Related posts

இனி கல் தொடாது கை!

மனத் தெளிவிற்கு தீர்வு வேண்டும்!

விமர்சனங்களை எதிர்கொள்ள பழகுங்கள்