போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல்கள் மோதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

சென்னை: சாலை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோட்டூர்புரம் 4வது சந்து நாயுடு தெருவை சேர்ந்தவர் தாமஸ் தனசீலன் (63). இவரது வீட்டின் அருகே உயர் நீதிமன்ற வழக்கறிஞரான பத்மநாபன் (40) என்பவர் வசித்து வருகிறார். கோட்டூர்புரம் நாயுடு தெரு 4வது சந்து அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் பொதுவான பாதையாக இருந்து வருகிறது. இந்த பாதையில் சிமென்ட் சாலைகள் அமைக்க மாநகராட்சி முன்வந்தபோது, சாலைகள் அமைத்தால் தனது வீட்டில் மழைநீர் புகுந்துவிடும் எனக்கூறி பத்மநாபன், தாமஸ் சீனிவாசனுடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதை சீரமைக்கும் பணியில் தாமஸ் சீனிவாசன் தனது குடியிருப்பை சேர்ந்த  சைதாப்பேட்டை வழக்கறிஞர்களான பாலமுருகன், மணிகண்டன், ஏஞ்சல் ஆகியோருடன் இணைந்து ஈடுபட்டார்.  இதை பார்த்த வழக்கறிஞர்கள் பத்மநாபன், ரவி, பாலசந்தர் ஆகியோர் அவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இரண்டு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்திற்குள் வந்த  இரு தரப்பு வழக்கறிஞர்களும் அங்கேயும் சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செல்லம்மாள் ஆகியோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார்  மூன்று வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி