போலீஸ்காரரை பிளேடால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை வேலூர் கோர்ட்டு தீர்ப்பு குடிபோதையில் ரகளை செய்ததால் எச்சரித்த

வேலூர், ஏப்.13: குடியாத்தத்தில் குடிபோதையில் ரகளை செய்ததால் எச்சரித்த, போலீஸ்காரரை வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அருண்கண்மணி(32). இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குடியாத்தம் போலீஸ் நிலையம் அருகே தாழையாத்தம் பஜார் பகுதியில் குடியாத்தம் மேல்ஆலத்தூர் ரோடு, ஜோகிமடத்தை சேர்ந்த நவீன்குமார்(29) என்பவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த அருண்கண்மணி, நவீன்குமாரை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளார். அப்போது நவீன்குமார், போலீஸ்காரர் அருண்கண்மணியை பிளேடால் முகம், கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார். மேலும் அவரை ஆபாசமாக பேசியதோடு, தடுக்க வந்த பொதுமக்களையும் மிரட்டிவிட்டு சென்றார். இதுதொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் சிவப்பிரகாசம் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். அதில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய நவீன்குமாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ₹1,000 அபராதமும், ஆபாசமாக பேசியதற்கு 1 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை