போலீசார் மீது வெடிகுண்டு வீசிய விவகாரம் 15 ஆண்டாக தலைமறைவாக உள்ள ரவுடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: மயிலாப்பூரில் போலீசார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து கடநத 15 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள ரவுடி ஜெகனை தேடப்படும் குற்றவாளியாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மயிலாப்பூர் முத்துராம் தெருவில் கடந்த 2001ம் ஆண்டு, பிரேம்சந்த் மற்றும் தரம்சந்த் ஆகியோருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. தகவலறிந்த மயிலாப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து அவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தரமணி ஏரிக்கரை தெருவை சேர்ந்த ரவுடி ஜெகன் (எ) ஜெகதீசன் (25) உள்ளிட்டோரை கைது செய்தனர். வெடிகுண்டு வீசப்பட்டதால் இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஜெகன், திடீரென தலைமறைவாகிவிட்டார்.

அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக ஜெகன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். கைது செய்யப்பட்ட போது அவர் கொடுத்த முகவரியில் தற்போது வசிக்கவில்லை என்று போலீசார் நீதிமன்றத்தில் அறிவித்தனர். அதைதொடர்ந்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஜெகன் மீது பிடியாணை பிறப்பித்து, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. எனவே, தலைமறைவாக உள்ள ஜெகன் (எ) ஜெகதீசன் குறித்து தகவல் தெரிவித்தால் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை