போலி பெண் சப்- கலெக்டரின் தாய், பாட்டி வீட்டில் சிறை வைப்பு கரூரை சேர்ந்த 5 வாலிபர்களுக்கு வலை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய

வந்தவாசி, அக்.18: வந்தவாசி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய போலி பெண் சப்- கலெக்டரின் தாய் மற்றும் அவரது பாட்டி வீட்டில் சிறை வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக கரூரை சேர்ந்த 5 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாஞ்சரை சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி பரிமளா(61). இவரது மகள் சூரியகுமாரி(40). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் சப்-கலெக்டராக இருப்பதாக போலி அடையாள அட்டையை வைத்து கொண்டு, அங்குள்ளவர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினாராம். இதை நம்பிய கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து சூரியகுமாரியை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுசம்பந்தமான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், பணம் கொடுத்து ஏமாந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ்(30), தாமோதரன்(31), குணசேகரன்(28) உட்பட 5 வாலிபர்கள் கடந்த 13ம் தேதி இரவு 11 மணியளவில், சூரியகுமாரியின் ஊரான பாஞ்சரை சித்தாத்தூர் கிராமத்திற்கு காரில் வந்துள்ளனர். அப்போது, சூரியகுமாரி வீட்டில் இருந்தால் பணத்தை வாங்கி செல்லலாம் என வந்தவர்கள், அங்கு அவர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். உடனே வீட்டில் இருந்த சூரியகுமாரியின் தாயார் பரிமளா(61) என்பவரிடம், உங்களது மகள் எங்களை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார். பணத்தை திரும்ப கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வோம் என கூறினார்களாம்.

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பரிமளாவை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. மேலும், ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், பரிமளா மற்றும் அவரது தாயார் எல்லம்மாள்(80) ஆகிய இருவரையும் வீட்டினுள் வைத்து வெளிப்பக்கமாக தாழ்ப்போல் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். மறுநாள் அதிகாலை 4 மணியளவில் அவ்வழியாக வயலுக்கு நீர்பாய்ச்ச சென்றவர் உதவியுடன் கதவை திறந்து, பரிமளா, அவரது தாயார் எல்லம்மாள் இருவரும் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதுகுறித்து பரிமளா தேசூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார். சப்- கலெக்டர் எனக்கூறி ஏமாற்றிய பெண்ணின் தாயார் மற்றும் பாட்டியை வீட்டினுள் சிறை வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை