போலி இணையதளம், செயலிகள் மூலம் பொதுமக்களிடம் மோசடி

 

கோவை, செப். 25: எம்.எல்.எம். கம்பெனி என்ற பெயரில் போலி இணையதளங்கள், செயலிகள் மூலம் பொதுமக்களிடம் நடைபெறும் மோசடியை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆல் இந்தியா நெட்வொர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேசன் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு பதிவு பெற்ற எம்.எல்.எம். கம்பெனிகள் மூலம் இந்தியா முழுவதும் பட்டதாரி இளைஞர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். எனவே எம்.எல்.எம். கம்பெனியை அங்கீகரிக்க தனி சட்டம் இயற்றவும், தனி அமைச்சகம், தனி வாரியம் அமைக்கவும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கைகள் வைத்துள்ளோம்.

அரசுகளும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ஒன்றிய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெறாமல் எம்.எல்.எம். கம்பெனி என்று கூறி, போலியான இணையதளங்கள், போலி செயலிகள் மூலமாக பல மடங்கு வட்டி தருவதாக அப்பாவி மக்களை மூளை சலவை செய்து டெபாசிட் பெற்று கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றுகின்றனர். எனவே எம்.எல்.எம். என்கிற பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி இணைய தளங்களையும், போலி செயலிகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உடன் அகில இந்திய பொதுச்செயலாளர்கள் பிந்து பஜாஜ், சுமித் அகர்வால், ஒருங்கிணைப்பாளர் மஞ்சுநாத், பொருளாளர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை