போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் நில மோசடி: வழக்கறிஞர் கைது

 

ஆவடி: சென்னை அண்ணா நகர், 3வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் கீதா (60). கடந்த பிப்ரவரி மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, பொன்னேரி, தேவதானம் கிராமத்தில், எனக்கு 32 சென்ட் நிலம் இருந்தது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு, மேற்கூறிய இடத்தை, இருளர் இனத்தவர் குடிசை அமைத்து ஆக்கிரமித்து வைத்திருந்தனர். பின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2018ல், குடும்ப வக்கீல் விமல்குமார் பெயருக்கு பொது அதிகாரம் செய்து கொடுத்தோம். ஆனால் பொது அதிகார பத்திரம் எங்களிடம் காண்பிக்கவில்லை. விசாரித்தபோது, பொது அதிகார பத்திரம் என நம்ப வைத்து, கிரைய பத்திரத்தில் என்னிடம் கையெழுத்து வாங்கியது தெரியவந்தது. இதுகுறித்து, விமல் குமாரிடம் கேட்டபோது, பணம் கொடுத்தால், நிலத்தை மீண்டும் என் பெயரில் மாற்றி தருவதாக மிரட்டினார்.

அதன்படி, விமல்குமார் ரூ.3.5 லட்சம் பெற்றுக்கொண்டு, அவரது பெயரில் பட்டாவை மாற்றிக் கொண்டார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.60 லட்சம். எனவே, என்னை நம்ப வைத்து ஏமாற்றிய விமல்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார். பின்னர் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் வள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில்தலைமறைவாக இருந்த பூந்தமல்லி, மேல்மாநகரைச் சேர்ந்த விமல்குமார் (40) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி