போராட்டத்திற்கு திரண்ட ஆசிரியர்கள்

 

மல்லசமுத்திரம், டிச.12: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மல்லசமுத்திரம் ஒன்றிய அமைப்பு சார்பில், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை மல்லசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம், கடந்த 8ம் தேதி மல்லசமுத்திரம் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்களுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று உள்ளிருப்பு போராட்டத்திற்காக, மல்லசமுத்திரம் வட்டார கல்வி அலுவலகம் முன் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டனர்.

இதுகுறித்த தகவலின் பேரில், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம் நேரில் வந்து விசாரித்தார். பின்னர், அவரது தலைமையில், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சக்திவேல் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஆசிரியர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வரும் ஜனவரி முதல் வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். இதையடுத்து, உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய செயலாளர் ஆசிரியர் ரவி தெரிவித்தார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை