போய் வருவோம் புளியஞ்சோலை: இதமான தென்றல் காற்று… ஓய்வெடுக்க மரத்தின் நிழல்…

புளியஞ்சோலை மிகுந்த அடர்த்தியுடன் காணப்பட்ட இடம் ஆகும். புலி வாழ்வதற்கே அஞ்சக்கூடிய சோலையாக இப்பகுதி இருந்துள்ளது. புலி+அஞ்சும்+சோலை என்ற பெயரே நாளடைவில் மருகி புளியஞ்சோலை என்றானது என இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். புளியஞ்சோலைக்குள் நீங்கள் இருந்தால், உங்களை நீங்களே மறந்து விடுவீர்கள். சற்று முன்னேறி உள்ளே சென்றால் சலசலக்கும் நீரோடை. இந்த நீரோடையில், வளவளப்பான உருண்டை, உருண்டையாய் பாறைகள், கூடவே கூழாங்கற்களால் வெள்ளை, வெள்ளெர் என உருண்டை கற்கள் ஆச்சரியம். சில்லென்று இருக்கும் ஓடை நீரில் கால் வைத்தாலே போதும். சிறு பிள்ளைகளின் குதூகலம் பெரியோருக்குள்ளும் வந்து ஒட்டிக் கொள்ளும்…வான் வரை வளர்ந்து உயர்ந்த மரங்கள், இதமான தென்றல் காற்று, நீராடி மகிழ ஓடை , ஓய்வெடுக்க மரத்தின் நிழல் என மனதிற்கு இதமளிக்கும் ஏராளமான சிறப்புகள் இங்கு உண்டு என சொல்லிக்கொண்ட போகலாம்…கொல்லிமலையின் உச்சியில் இருந்து வீழும் ஆகாய கங்கையின் நீர்வீழ்ச்சி நீரே இந்த நாட்டாமடுவு என்று அழைக்கப்படும் ஓடையில் தண்ணீராக வருகிறது. சலசலத்து ஓடிவரும் மூலிகை கலந்த தண்ணீரில் குளிக்கும் போது உற்சாகம் பிறக்கும். இந்த தண்ணீரில் குளிக்கும் பொழுது சோப்பு, ஷாம்பு ஆகியவை பயன்படுத்தாமலேயே நமது உடலும், துணிகளும் சுத்தம் அடையும். மூலிகை தண்ணீர் என்பதால் உடலில் உள்ள அதிக உஷ்ணம் வெளியேறி உடல் சமன் செய்யாட்ட வெப்ப நிலையை அடைகிறது. உடல் தூய்மைக்கு நாட்டாமடுவில் பாய்ந்தோடி வரும் தண்ணீர் என்றால், மனதிற்கு இதமளிக்க கொஞ்சி விளையாடும் குரங்குகளும், நீரில் துள்ளி விளையாடி கால்களின் ஒட்டியுள்ள அழுக்கை சுத்தப்படுத்தும் மீன்களும், விதவிதமான பறவைகள் எழுப்பும் சப்தங்களும் மனதில் மகிழ்வை ஏற்படுத்தி மன அழுத்தத்தை போக்குவதாக உள்ளது. சுருக்கமாக சொல்வதென்றால் மிகுந்த பொருட் செலவு இல்லாமல் எளிமையாக இயற்கையோடு கலந்து ஒரு நாள் வாழ்ந்திட புளியஞ்சோலை சுற்றுலா தளம் அருமையான தேர்வாகும். நுழைவு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது. வனத்துறையினர் பகல் பொழுதில் முகாமிட்டு அங்கே இருப்பது சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு உணர்வை தருவதாக அமைந்துள்ளது. புளியஞ்சோலையில் பெரியசாமி கோயில் உள்ளது. நீராடல் முடித்த கையோடு இந்த கோயிலில் சுவாமி தரிசனமும் செய்யலாம். புளியஞ்சோலை அடிவாரத்தில்  ராம பிரசன்ன நாதனந்த யோகேஸ்வரர் மற்றும் இவரது சீடரான குயின்ஸ் பெரிய சுவாமிகளுக்கு சித்திரை மாதத்தில் குருபூஜை விழா நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். ஆடி 18 அன்று சித்தர்கள் குருபூஜையும் நடைபெறுகிறது. தாயம்மாள் உடனமர் அரப்பளீஸ்வரர் சன்னதியும் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஓடையில் ஓடும் தண்ணீர் உப்பிலியபுரம், பி. மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வளம் கொளிக்கும் விவசாய நிலமாக மாற்றுகிறது. பிரியாணி அரிசி எனப்படும் சீராக சம்பா அரிசி இப்பகுதியில் அதிகமாக விளைகிறது. காலை பொழுதில் புளியஞ்சோலைக்குள் நுழைந்தால் நீராடல், உணவு, ஓய்வு, பின்பு நீராடல் என ரம்யமாக பொழுதை கழிக்க முடியும். சாப்பிடுவதற்கு சூடாக பொரித்த மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வசிப்பவர்களிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு குளிக்க உள்ளே சென்றால் திரும்பி வருவதற்குள் கோழிக்கறி வறுவல், கோழிசூப், ரசம், சாதத்துடன் தயாராக செய்து கொடுக்கின்றனர்.இன்பச்சுற்றுலா என்ற பெயரில் எங்கெங்கோ சுற்ற வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த பொருட் செலவில் குதூகலமாய் பொழுதை கழித்திட குளு , குளு புளியஞ்சோலை மனதிற்கு இதம் தரும் அழகிய சோலை தான். புளியஞ்சோலைக்கு சென்றவர்கள் மாலை திரும்பும்போது பிரிய மனமில்லாமல் திரும்புதுவதை காண முடியும். புளியஞ்சோலைக்கு திருச்சியில் இருந்து துறையூர் வழியாகவும், முசிறி வழியாகவும் செல்லலாம்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்