போதை மறுவாழ்வு சிகிச்சை எப்படி நடக்கிறது?!

நன்றி குங்குமம் டாக்டர்மது அருந்துகிறவர்களை குடிகாரர்கள் என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று குடிநோயாளி என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைக்குமளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. போதைக்கு அடிமையாகிறவர்கள் உடல் மற்றும் மனரீதியாகவும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாவதுடன், தங்கள் இன்னுயிரையும் சில நேரங்களில் இழக்கிறார்கள். இது அவரைச் சார்ந்த குடும்பத்தினர்களுக்கு தாங்க முடியாத வலியை பலவிதங்களிலும் ஏற்படுத்திவிடுகிறது. டாஸ்மாக்கின் எதிரொலியாக குடிநோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இதற்கென்று தனிப்பிரிவும் இயங்கி வருகிறது. அரசு மருத்துவமனைகள் தவிர்த்து தனியார் மறுவாழ்வு சிகிச்சை மையங்களும் நிறைய உருவாகி வருகின்றன. குடிபோதை நோயாளிகளுக்கான சிகிச்சை என்று பல விளம்பரங்களையும் ஊடகங்களில் பார்க்கிறோம். இத்தகைய போதை மறுவாழ்வு மையங்களில் என்னதான் நடக்கிறது? எப்படிப்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?சென்னை மாங்காட்டில் அமைந்துள்ள நியூ விஸ்டம் குடிபோதை மறுவாழ்வு மற்றும் மனநல சிகிச்சை மையத்துக்குச் சென்றோம்… மருத்துவமனையின் மனநல ஆலோசகர் அருணா சிகிச்சை குறித்து விளக்கினார்…‘‘மது, கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்டிருக்கிற அனைத்துவித போதை பழக்கத்துக்கும் உள்ளாகி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். 18 வயது இளைஞர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை 55-க்கும் மேற்பட்டவர்கள் குடி மற்றும் போதை நோயிலிருந்து முற்றிலுமாக மீள்வதற்கும், அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காகவும், மீண்டும் அந்த பழக்கத்தைத் தொடராமல் இருப்பதற்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் மதுப்பழக்கத்துக்கு ஆளானால், அதில் ஒருவருக்கு குடிநோய் வருவது உறுதி. குடி நோயாளி என்பவர் இரவு பகல் என 24 மணி நேரமும் போதைக்கு அடிமையாக இருக்கும்போதும், அவருடைய அன்றாட நடவடிக்கைகளில் தலைகீழ் மாற்றங்கள் நிகழும்போதும் (அதாவது சரியான நேரத்தில் உணவருந்தாமல், சரியான நேரத்தில் தூங்காமல்) அவர் ஒரு குடி மற்றும் போதை நோயாளியாக இருப்பது தெரிய வரும்.குடி நோயாளிகள் மனரீதியாக, உடல்ரீதியாக என இருவகைகளிலுமே பாதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு பாதிப்புகளும் உயிரிழப்புவரை கொண்டு செல்கிறது. மனரீதியான பாதிப்பு என்பது தற்கொலை வரை செல்வது மற்றும் குடும்பத்தாரை, சமூகத்தாரைத் தொந்தரவுகள் செய்வது போன்ற பிரச்னைகள். இதில் இரண்டிலிருந்தும் இந்த நோயாளிகளை காப்பாற்ற வேண்டும். இதற்கு அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. உடல் பாதிப்பைப் பொறுத்தளவு கல்லீரல் நோய், இதயநோய், சிறுநீரகம் செயலிழப்பு, மூளை பாதிப்பு போன்ற பிரச்னைகளை உண்டுபண்ணுகிறது.’’மனரீதியாக என்ன சிகிச்சை அளிக்கப்படும்?‘‘சாதாரண மனநோயிலிருந்து அதி தீவிர மன நோய்வரை குடிநோயாளிகளுக்கு வருகிறது. நிறைய கற்பனைகள் செய்வது, கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை போன்றவை ஆரம்ப நிலையில் ஏற்படுகிறது. இதுவே சற்று தீவிரமாகும்போது தானாகவே பேசிக்கொள்வது, இருமுனை மனநிலை கோளாறு, மனச்சிதைவு நோய், மது சார்பு நோய்க்குறி போன்ற பிரச்னைகள் வருகிறது. அதனால் ஆரம்ப கட்டத்திலேயே அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது.’’சிகிச்சைக்கான கால அளவு என்ன?‘‘ஒவ்வொரு குடிநோயாளிக்கும் மூன்று மாதங்களுக்கு சிகிச்சை தேவை. இதில் உடல்ரீதியாக அவர்களை தேற்றுவதற்கு ஒருமாதம் போதுமானது. மேலும் அவர்களை மனரீதியாக தேற்றுவதற்குதான் மீதம் இருக்கிற இரண்டுமாதம். இதற்காக உடல்நல மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகர், சோஷியல் ஒர்க்கர், செவிலியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என ஒரு குழுவாக செயல்படுகிறோம்.இதுபோன்ற குடி நோயாளிகளை ஒரு இடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் சவாலானதாகும். அவர்களுக்கு தூக்கமின்மை, பசியின்மை, ஓர் இடத்தில் தங்களை நிறுத்திக்கொள்ள முடியாமை போன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கும். அதையெல்லாம் சரி செய்து அவர்களுக்குத் தேவையான மருந்துகளை கொடுத்து அவர்களை இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதற்கு ஒரு குழுவின் ஒத்துழைப்பு தேவை.’’சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்படுகிறது?‘‘குடிநோயாளியை அனுமதித்த அன்றே மருத்துவமனையில் பணியாற்றுகிற செவிலியர் அவருக்கு உடல்நலன் சார்ந்த எல்லா பரிசோதனைகளையும் மேற்கொள்வார். ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் எடை பரிசோதனை, உடலில் காயம் தொடர்பான பரிசோதனை என அடிப்படையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான குடிநோயாளிக்கு இதயம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மறுநாள் பொதுநல மருத்துவர் வந்து அவருக்குத் தேவையான மருந்துகளைப் பரிந்துரைப்பார். மருந்துகள் எங்கள் மையத்தில் முன்கூட்டியே வாங்கி வைத்திருப்போம். அந்த மருந்துகள் அவருக்கு தரப்படும். நோயாளியின் நிலை கொஞ்சம் தீவிரமாக கண்காணிப்பட வேண்டி இருந்தால் அவருடைய குடும்பத்தார் விருப்பப்படி அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைப்போம். சிகிச்சைக்குப் பிறகு இந்த மையத்தில் அனுமதிப்போம். நோயாளி வந்த முதல் நாள் இரவு அவருடைய தூக்க நடவடிக்கையை கண்காணிப்போம். சில நோயாளிகள் இரவில் தூங்காமல் பிரச்னை செய்வார்கள். இதன் அடிப்படையில் மறுநாள் காலை மனநல மருத்துவரை வரவழைத்து பரிசோதிப்போம். பின்பு என்ன விதமான மனநோய் என்பதை மருத்துவர் எங்களுக்குத் தெரிவித்து விட்டு, நோயாளிக்கு தேவையான சிகிச்சைகளையும் மருந்துகளையும் பரிந்துரைப்பார். அதன்படி இங்கிருக்கிற செலிவியர்கள் அந்த நோயாளியை பராமரிப்பார்கள்.’’செவிலியர் வரலட்சுமியிடம் பேசினோம்…‘‘மனநல ஆலோசகர் மற்றும் பொதுநல மருத்துவர் பரிந்துரைக்கிற சிகிச்சைகளை உடன் இருந்து செய்ய வேண்டும். இவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை கவனித்து அதை மருத்துவரிடம் சொல்வது கட்டாயம். நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, ஊசி, ட்ரிப்ஸ் போன்றவற்றை மருத்துவர் பரிந்துரையின்படி தக்க நேரத்தில் அளிக்கிறோம். குணமடைந்தவுடன் வீட்டில் உள்ளவர்களை அழைத்து பேச வைத்துவிட்டு, அவருக்குத் தேவையான மருந்துகளை வீட்டாரிடம் கொடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.குறிப்பாக, குடியைத் தடுப்பதற்கான மருந்துகள் அந்த நோயாளிக்கு தரப்படும். அவரை வீட்டுக்கு அனுப்பிய இரண்டு நாள் கழித்து அவரைப்பற்றி அவரின் குடும்பத்தாரிடம் விசாரிப்போம். அதிகபட்சம் இந்த குடிநோய் சிகிச்சைக்குப் பிறகு யாரும் குடிப்பதில்லை. அப்படி யாராவது மீண்டும் குடியைத் தொடங்கிவிட்டால் அவரை மீண்டும் சிகிச்சைக்கு அழைத்து வரச் சொல்வோம்.’’இந்த மறுவாழ்வு மையத்தைத் தொடங்கிய திருமலை முன்பு ஒரு குடிநோயாளிதான். அதில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களிலிருந்து பாடம் கற்றே இம்மையத்தைத் தொடங்கியதாகக் கூறுகிறார். ‘‘சென்னைதான் எனக்கு சொந்த ஊர். நான் பிறந்த இடம் ஓட்டேரி. நான் ஒரு ஆட்டோ ஓட்டும் தொழிலாளியாக இருந்தேன். அப்போது இதுபோன்ற குடிபோதைக்கு அடிமையாகி என்னுடைய மனைவி குழந்தைகள் எல்லோரும் என்னைவிட்டு பிரிந்துவிட்டனர். குடும்பம் இல்லாததால் என்னுடைய வாழ்க்கையையே இழந்துவிட்டேன். போதை விஷயத்தில் குடி முதல் கஞ்சா போன்ற எல்லா போதை பொருளையும் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் என்னால் எழுந்து கூட நடக்க முடியவில்லை. பிறகு, நண்பர்களின் உதவியால் நுங்கம்பாக்கத்தில் உள்ள குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து மூன்றே மாதத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாரானேன். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. அப்போதுதான் என்னைப் போல் குடிபோதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க நினைத்தேன். நான் 10-வது வரை கூட படிக்கவில்லை. இருந்தாலும் அனுபவப்பூர்வமாக ஒரு மையம் தொடங்குவதற்கான அனைத்து; விபரங்களையும் தெரிந்துகொண்டேன். முறையான அரசு அனுமதிபெற்று இந்த மையத்தை தொடங்கி நடத்தி வருகிறேன்.ஆரம்பத்தில் 3 நோயாளிகள் இருந்தார்கள். தற்போது 55; நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் வருகிறார்கள். இங்கு வரும் நோயாளி ஒருவருக்கு மாதம் ரூபாய் 12,500 ரூபாய் கட்டணமாகப் பெறுகிறோம். பொருளாதாரரீதியாக சிரமப்படுபவர்களுக்கு கட்டணத்தை குறைத்துக் கொள்கிறோம். அவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்திலிருந்துதான் மருத்துவர்கள் ஊதியம், செவிலியர், சோஷியல் ஒர்க்கர், பணியாளர்கள் மற்றும் மருந்து மாத்திரைகள், மூன்று வேளை ஊட்டச்சத்துமிக்க உணவு போன்றவற்றுக்கு செலவு செய்கிறோம். குறிப்பாக, இந்த மையத்திலிருந்து சிகிச்சை பெற்று போனவர்கள் மறந்து நல்லபடியாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களின் குடும்பத்தாரிடமும் தொடர்ந்து அவரைப் பற்றி விசாரித்தும் வருகிறோம்.’’சிகிச்சை பெற்று குணமடைந்த மதுரை விருமாண்டியிடம் பேசினோம்…‘‘நான் பள்ளியில் படிக்கும்போதே எல்லா வித போதை பழக்கத்துக்கும் உள்ளாகியிருந்தேன். இந்த மையத்தைப் பற்றி கேள்விப்பட்டு என்னுடைய பெற்றோர்கள் இங்கு வந்து சேர்த்தார்கள். மூன்று மாதத்திற்குள் குணமடைந்துவிட்டேன். என் குடும்பத்தில் இப்போது அன்பாகவும், மரியாதையுடனும் இருக்கிறார்கள். முழுமையாக குணமடைந்துவிட்டதால் நான் இங்கேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.’’சோஷியல் ஒர்க்கர் தீபிகாவிடம் பேசினோம்…;இதுபோன்று பொதுநலன் சார்ந்த ஒரு பணியைத்தான் நான் செய்வதற்கு விரும்பி இந்த துறையை படித்து இங்கு பணியாற்றுகிறேன். குடி நோயாளிகள் தங்களுடைய உடல் அளவு பாதிப்புகளில் ஒரே மாதிரி இருந்தாலும் தங்களுடைய மனரீதியான பாதிப்புகளில் வெவ்வேறாக இருக்கிறார்கள். அதனால் அவர்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அவர்கள் பாதிப்பு என்ன என்று நமக்கு தெரிய வருகிறது. அவ்வாறுதான் நாங்கள் ஒவ்வொரு நோயாளியிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் குறித்து வைத்துக்கொண்டு மருத்துவரிடம் காட்டி அவருக்கு உரிய சிகிச்சையை அளிக்கிறோம். மேலும் இந்த மருத்துவமனையிலிருந்து நல்லபடியாக குணமடைந்தவர்களையும் இங்கு அழைத்து அவர்களை முன் உதாரணமாக பேச வைத்து தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளை சரி செய்கிறோம்.’’– க.இளஞ்சேரன்படங்கள் : ஆர்.சந்திரசேகர்

Related posts

பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!

கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

புதினா நீரின் நன்மைகள்!