போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு 2 நண்பர்கள் கழுத்தறுத்து கொடூர கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை

தாம்பரம்: பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோனு (எ) கோபாலகிருஷ்ணன். கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசி போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான அண்ணாமலை (23), ஜில்லா (எ) தமிழரசன் (23) ஆகியோர், போதைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும், ஒரு கட்டத்தில் போதைப்பொருட்கள் கிடைக்கும் இடத்தில் நேரடி தொடர்பு கிடைத்தவுடன் கோபாலகிருஷ்ணனிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்குவதை நிறுத்திக்கொண்டு, அவர்களாகவே போதைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இதில், கோபாலகிருஷ்ணனின் கஸ்டமர்களுக்கும் நேரடியாக விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால், கோபாலகிருஷ்ணனுக்கு வியாபாரம் தடைபட்டதால், நண்பர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டு, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரி என்பவருக்கு நேற்று முன்தினம் இரவு தொடர்புகொண்டு, சவாரி இருப்பதாக கூறி ஆட்டோவை எடுத்து வர கூறியுள்ளார்.

தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் ஹரி அங்கு சென்றபோது ஆட்டோவில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ஆரிப், மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மற்றும் ஒருவர் என மொத்தம் 4 பேர் கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஏரி உள்ளனர். இதில், சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரி, எதற்காக இதையெல்லாம் கொண்டு வருகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு கோபாலகிருஷ்ணன் அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ ஆட்டோவை எடு என கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, குண்டுமேடு பகுதிக்கு சென்றபோது, அங்கே சாலை ஓரத்தில் அண்ணாமலை, தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களிடம் சென்று பேச வேண்டும் என அழைத்தபோது, இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் ஆயுதங்களை வெளியே எடுத்தவுடன் அண்ணாமலை மற்றும் தமிழரசன் உடனிருந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் சிக்கிய அண்ணாமலை மற்றும் தமிழரசனை, கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இரும்புராடால் அவர்கள் இருவரையும் அடித்துக்கொண்டே பெருங்களத்தூர் அருகே குண்டுமேடு பகுதியில் தாம்பரம் மாநகராட்சி உரை கிடங்கு பின்புறம் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதில், அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரி, சவாரி என்று கூப்பிட்டு ஏன் இதுபோன்ற பிரச்னைகளில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டவுடன், அண்ணாமலை மற்றும் தமிழரசனை சுடுகாட்டில் இறங்கிக்கொண்டு, ஆட்டோ ஓட்டுநர் ஹரியை அந்த கும்பல் அங்கிருந்து அனுப்பியுள்ளது. பின்னர், சுடுகாடு கேட் அருகே சென்றபோது, ஆட்டோ ஓட்டுநர் ஹரிக்கு மீண்டும் தொடர்புகொண்ட கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை தான் நடக்கிறது ஒரு பிரச்னையும் இல்லை நீ போ என கூறியுள்ளார். ஆனாலும், சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரி, ஓட்டேரி காவல் நிலையத்திற்கு சென்று தனது ஆட்டோவில் சவாரி எனக்கூறி வந்த நபர்கள், இருவரை அடித்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குண்டுமேடு சுடுகாடு பகுதிக்கு அழைத்து சென்றார்கள் என தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஓட்டேரி போலீசார் சம்பந்தப்பட்ட பகுதி தங்களது எல்லை இல்லை எனவும், பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லை என்பதால் அங்கு சென்று புகார் அளியுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் ஹரி, பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற பீர்க்கன்காரணை போலீசார், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த அண்ணாமலை மற்றும் தமிழரசன் ஆகியோர் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கோபாலகிருஷ்ணன் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரது செல்போன் சிக்னலை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்