போதைப்பொருளுக்கு எதிரான தொடர் நடவடிக்கையால் வடக்கு மண்டலத்தில் கஞ்சா குட்கா விற்பனை குறைந்தது

* போதை மாத்திரை விற்பவர்களுக்கு ‘செக்’
* கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தகவல்

போலீசாரின் தொடர் நடவடிக்கையால் சென்னை வடக்கு மண்டலத்தில் கஞ்சா, குட்கா விற்பனை குறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் கஞ்சா மற்றும் குட்காவுக்கு எதிராக 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 310 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதை மாத்திரை விற்பனைக்கும் புதிய செக் வைத்துள்ளனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். பலதரப்பட்ட மக்கள் உள்ள இந்த சென்னையில் பல்வேறு விதமான போதை வஸ்துகளும் புழக்கத்தில் உள்ளன. மாணவர்கள், இளைஞர்களிடையே மதுபானம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட பழக்க வழக்கங்களும் அதிகரித்து காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஒருமுறை என நினைத்து சில போதை பொருட்களை எடுத்துக்கொள்ளும் அவர்கள், அதன் பிறகு, அதுவே தொடர்ந்து நாளடைவில் அவர்கள் போதைக்காக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீசார் எவ்வாறு கவனமுடன் செயல்படுகிறார்களோ அதே போன்று, நாளைய சமூகமான இளைஞர்களை பாதுகாப்பதிலும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக போதை வஸ்துக்களில் இருந்து இளைய சமூகத்தை காக்க பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 4 மாதங்களாக போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளைவாக, சென்னை வடக்கு மண்டலத்தில் படிப்படியாக போதை பொருட்களில் நடமாட்டம் குறைந்து வருகிறது. இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரசனைகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

அந்த வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் போதை பொருட்களின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக, காவலர்கள் சிலர் குட்கா வியாபாரிகளுக்கு துணை போவதாக வந்த தகவலின் பேரில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த சுமார் 800 காவலர்களை பணியிட மாற்றம் செய்தார். அதனை தொடர்ந்து, குட்கா மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் தொடர்பில் இருந்த சில காவலர்கள் வேறு மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். குட்கா வழக்குகளை பொறுத்தவரை எக்காரணத்தை கொண்டும் காவல் நிலைய பிணையில் விடக்கூடாது.

கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பித்தார். மேலும், குட்கா வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. அவர்களது வங்கி கணக்கில் இருந்த பணத்தை அவர்களால் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், குட்கா விற்கப்படும் கடையின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் இந்த தொடர் நடவடிக்கைகளால் குட்கா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மளிகை கடை, டீக்கடை மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகள் இனி குட்கா பொருட்களை விற்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதே போன்று, கஞ்சாவுக்கு எதிராகவும் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், சென்னை வடக்கு மண்டலத்தில் குற்ற செயல்களின் எண்ணிக்கையும் கடந்த 4 மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல், தற்போது வடசென்னையில் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலம் ஏற்றிக்கொண்டு விபரீத போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதன் மூலம் புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணையில் இறங்கிய போலீசார் ஏற்கனவே, மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் மொத்தமாக மருந்து பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தடை செய்யப்பட்ட மருந்துகளை எக்காரணத்தைக் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தி இருந்தனர். இருந்தபோதும், தடை செய்யப்பட்ட மாத்திரைகள் இளைஞர்களுக்கு தடையின்றி கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுபற்றி விசாரணையில் இறங்கியபோது, வட மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் சிலர் மாத்திரைகளை வாங்கி, அதனை கூரியர் நிறுவனங்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து, விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கூரியர் நிறுவனங்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி, ரகசியமாக வடமாநிலங்களில் இருந்து வரும் கூரியர்களை கண்காணித்து அதன் மூலம் குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வாங்கும் நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வகையில் கொடுங்கையூர் பகுதியில் கூரியர் நிறுவன ஊழியர்களின் உதவியுடன் மிகப்பெரிய போதை மாத்திரை கும்பல் பிடிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோன்று, ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்குபவர்கள் தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வடக்கு மண்டலத்தில் போலீசார் எடுத்து வரும் தீவிர நடவடிக்கையால் கடந்த 4 மாதத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை பெருமளவு குறைந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இல்லாமல் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் கூறுகையில், ‘‘குட்கா, கஞ்சா வழக்குகளை பொறுத்தவரை எந்தவித சமரசமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் படிப்படியாக வடக்கு மண்டலத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை குறைந்துள்ளது. மேலும், போதைப்பொருள் வழக்கில் அதன் பின்புலத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி குட்கா மற்றும் கஞ்சா கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து அவர்களையும் கைது செய்து வருகிறோம். இதன் மூலம், சங்கிலி தொடர் போல நடக்கும் குற்ற செயல்கள் மற்றும் குட்கா பொருட்கள் பரிமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் குட்கா மற்றும் கஞ்சாவை பயன்படுத்துகிறார் என்றால் அவர் எங்கிருந்து வாங்குகிறார், அவருக்கு யார் தருகிறார் என அனைத்தும் ஆராய்ந்து அனைவரும் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், போதை மாத்திரைகளை பொறுத்தவரை தற்போது ஆன்லைன் மூலமாக அதிகளவில் இளைஞர்கள் மாத்திரைகளை வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வட மாநிலங்களில் இருந்து யார் அதிகளவு தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வாங்குகிறார்கள் என்பது குறித்து முழுமையான விசாரணையில் இறங்கியுள்ளோம். படிப்படியாக இதுகுறித்து விசாரணையை துரிதப்படுத்தி ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் வாங்க முடியாத அளவிற்கு தடை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், மெடிக்கல் ஷாப்களிலும் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை விற்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். மேலும் அனைத்து மெடிக்கல்களிலும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது பார்சல் மற்றும் கூரியர் நிறுவனங்களையும் போலீசார் தொடர்பு கொண்டு அவர்களது உதவிகளையும் பெற்று போதை மாத்திரை விஷயத்தில் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். வருங்காலங்களில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் வாங்குவதை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன,’’ என்றார்.

50 வங்கி கணக்குகளில் ₹30 லட்சம் முடக்கம்
சென்னை வடக்கு மண்டலத்தில், கடந்த டிசம்பர் மாதம் 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 110 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குட்காவை பொறுத்தவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 80 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், கைது செய்யப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்குகள் மூலம் சுமார் ₹30 லட்சம் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 150 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கூரியர் நிறுவனம் மூலம் 21 பேர் சுற்றிவளைப்பு
கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு, இடங்களில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வாங்கி கொள்ளை லாபத்திற்கு விற்று வருவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு கிடைத்த தகவலின் படி, கடந்த 5 மாதங்களில் மட்டும் 21 பேர் கைது செய்யப்பட்டு 4 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களின் நெட்வொர்க் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் இவர்கள் வட மாநிலத்திலிருந்து மாத்திரைகளை கூரியர் மூலம் வாங்கியது தெரியவந்துள்ளது. கூரியர் நிறுவனங்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி, இந்த போதை மாத்திரை விற்பனை கும்பலை கையும் களவுமாக பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் விற்பனை செய்யும் 2 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
பல்வேறு வட மாநிலத்தில் இருந்து செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் பணத்திற்காக தடை செய்யப்பட்ட மாத்திரைகளை எந்த ஒரு மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கி வருகின்றனர். இதனை பயன்படுத்தி சென்னையில் சில கும்பல் தொடர்ந்து ஆன்லைன் மூலம் மாத்திரைகளை வாங்கி, அதனை இளைஞர்களுக்கு விற்று வந்தன. தற்போது, அவ்வாறு ஆன்லைனில் போதை மாத்திரைகளை விற்கும் நிறுவனங்கள், வலைதளங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதன் மூலம் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப இனி மாத்திரைகளை விற்பதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த நிறுவனங்கள் அதிக அளவில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை விற்பனை செய்கின்றன என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்க களத்தில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்கும் நிறுவனங்களுக்கு போலீசார் செக் வைத்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை