போதிய விலை கிடைக்காததால் வெங்காயம் விற்பனையில் நேரடியாக களமிறங்கிய விவசாயிகள்

நெல்லை : நெல்லையில் தற்போது சின்ன வெங்காயம் அதன் அளவுகள் மற்றும் தரத்தைப் பொறுத்து குறைந்தது ரூ.20 முதல் ரூ.32 வரை சில்லறை விலைக்கு விற்கப்படுகிறது. இதில் சின்ன வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காத நிலை உள்ளது. இதையடுத்து சில இடங்களில் விவசாயிகள் நேரடியாகவே வெங்காய விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாழையூத்து அடுத்துள்ள தென்கலம் பகுதியில் வயலை ஒட்டியுள்ள சாலையோரம் சின்ன வெங்காயம் விற்பனை செய்து கொண்டிருந்த கீழத்தென்கலத்தைச் சேர்ந்த விவசாயி முருகனிடம் கேட்டபோது,”நான் அரை ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளேன். இதற்கு விதை உள்ளி, பூச்சி மருந்து, உரம், களை வெட்டுகூலி, உழவுகூலி உள்பட அனைத்தும் சேர்த்து ரூ.30 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. இதிலிருந்து 1,500 கிலோ சின்ன வெங்காயம் கிடைக்கும். தற்போது உற்பத்தி அதிகம் இருந்தாலும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.

மொத்த வியாபாரிகளிடம் கொடுத்தால் ஒரு கிலோவுக்கு ரூ.25 வீதம் மொத்தம் ரூ.37,500 வரை எனக்கு வருமானம் கிடைக்கும். சின்ன வெங்காயத்தின் அளவு, தரம், ஈரப்பதத்தைப் பொறுத்து ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.25 வரை விவசாயிகளுக்கு கிடைக்கும். இதனால் 3 மாதங்கள் பராமரித்து, பல்வேறு செலவுகள் செய்யும் என்னைப் போன்ற விவசாயிகளுக்கு குறைவான அளவே லாபம் கிடைக்கும். எனவேதான் நான் உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்தை மூன்றரை கிலோ ரூ.100க்கு நானே விற்பனை செய்கிறேன்” என்றார்.
இதேபோல் பல விவசாயிகள் நேரடியாக தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய் உள்ளிட்டவற்றை வயல் பகுதியிலேயே விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.

Related posts

செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: சொந்த கேடருக்கு அனுப்பிவைப்பு

பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்