போடி-மதுரை ரயில் பாதை செல்லும் குடியிருப்பு பகுதிகளில் தடுப்புவேலி அமைக்கப்படுமா?.. விபத்துக்களை தடுக்க விரைவில் அமைக்க கோரிக்கை

தேனி, ஏப். 5: மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவையில் தேனி நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ரயில் செல்வதால் தண்டவாளத்தை ஒட்டி விபத்தை தடுக்க தடுப்புவேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மதுரையில் இருந்து போடி வரை மீட்டர்கேஜ் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவையானது கடந்த 2010ம் ஆண்டு டிச.31ம் தேதி வரை இருந்தது. நாடு முழுவதும் மீட்டர்கேஜ் ரயில்சேவை அனைத்தும் பிராட் கேஜ் எனப்படும் அகல ரயில்பாதையாக மாற்றப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. தேனி மாவட்டம், போடியில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த மீட்டர்கேஜ் ரயில்பாதையானது, கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டது.

இப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடந்த வருடம் மே மாதம் 27ம் தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை முதற்கட்டமாக பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. காலை மதுரையில் இருந்து புறப்பட்டு தேனிக்கு காலை 9.30 மணிக்கு இந்த ரயில் வருகிறது. மாலையில் தேனியில் இருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்கிறது. நாளொன்றுக்கு இருமுறை மட்டும் இந்த தண்டவாளத்தில் ரயில் பயணம் இருந்து வருகிறது. தேனியில் இருந்து போடி வரையில் ரயில்வே பணிகள் முற்றிலுமாக முடிந்துள்ளது. இதனால் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்படும் ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும் எனவும், போடியில் இருந்து மதுரை வரை இயக்கும்போது, போடியில் இருந்து சென்னை வரையிலும் செல்லும் வகையில் ரயில் சேவையை விரிவு படுத்த வேண்டும் என ரயில்பயணிகள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் மதுரையில் இருந்து போடி வரை பயணிகள் ரயில் இயக்கப்படும்.

அதேபோல போடியில் இருந்து வாரம் இருமுறை சென்னைக்கு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது அறிவிப்போடு நின்று போனது. எனவே, போடியில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற ரயில் பயணிகள் கோரிக்கை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுரையில் இருந்து தேனி வரும் ரயில் பாதையானது தேனி நகருக்குள் வரும்போது பெரும் சவால் நிறைந்ததாக இருந்து வருகிறது. குச்சனூர் வைகை ஆற்றை கடந்து தேனி வரும் வழியில் கருவேல்நாயக்கன்பட்டி, தேனி அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியை ஒட்டியுள்ள அண்ணாநகர் பகுதி, தேனி நகர் பாரஸ்ட் ரோடு முதல் தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கேட் வரையும் ரயில் தண்டவாளங்களை ஒட்டி இருபுறமும் குடியிருப்பு வீடுகள் மிகுந்துள்ளன.

ரயில்வராத நேரங்களில் இப்பகுதியில் குடியிருப்போர் ரயில் தண்டவாளங்களை கடந்து சென்று வருகின்றனர். சிறுவர், சிறுமியர் தண்டவாள பகுதியில் விளையாடி வருகின்றனர். கால்நடைகளும் ரயில்தண்டவாளத்தில் சர்வசாதாரணமாக திரியும் நிலை உள்ளது. மதுரையில் இருந்து போடி வரை ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், அவ்வப்போது சோதனை ரயில் ஓட்டமும் நடந்து வருகிறது. இத்தகைய சோதனை ரயில் ஓட்டம் நிகழும்போது தென்னக ரயில்வே துறையானது முறையான அறிவிப்பு வெளியிடாமல் திடீரென ரயிலை இயக்கியும் வருகின்றனர். இதன்காரணமாக அவ்வப்போது விபத்தும் நடந்து வருகிறது.
இதுபோன்று கடந்த மாதம் மதுரையில் இருந்து போடிக்கு சோதனை ரயில் இயக்கப்படும்போது இதனையறியாமல் ரயில் தண்டவாளம் அருகே குடியிருக்கும் ஒரு குடும்பத்திற்கு விருந்தினராக வந்த பெண் ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல கடந்த மே மாதம் தொடங்கி தேனி பகுதியில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, ரயில்தண்டவாளம் அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் ரயில் தண்டவாளங்களை கடக்க முடியாதபடி ரயில்தண்டவாளத்தை ஒட்டி ரயில்வே துறை மூலம் வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதில் ரயில்வே புறம்போக்கில் சிலர் குடியிருப்பதால் ரயில்வே வேலி அமைக்க முடியாத நிலை உள்ளதாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரயில்வே புறம்போக்கு பகுதியில் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு ரயில்வே பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு நிலத்தில் குடியிருப்போருக்கு நகர்புற வாழ்விட துறையின் மூலம் தேனி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை தன்பங்களிப்புத் தொகை இல்லாமல் வழங்கிட வேண்டும்.

நகர்புறத்தை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனையிடம் வழங்கி வீடு கட்டிக்கொள்ள வங்கிக்கடன் வசதி செய்து தர வேண்டும் என ரயில்வே புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. போடி-மதுரை பயணிகள் ரயில் சேவையின்போது, குடியிருப்புகளுக்கு மத்தியல் ரயில் செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் தொடராமல் இருக்க ரயில்வே துறை விரைந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கான வீடுகளை அரசு தரப்பில் ஒதுக்கச் செய்து, விரைவில் தேனி நகருக்குள் ரயில் தண்டவாள பகுதியில் மக்கள் நடமாட்டத்தை தவிர்க்க இரும்பு தடுப்புவேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’