பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கியது: மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதினர்

சென்னை: பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நேற்று ஆன்லைனில் தொடங்கியது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதினர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த உயர்கல்வி நிறுவனங்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்ட நிலையில், மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து உயர்கல்வி மாணவர்களுக்கும் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக உயர்கல்வி துறை அறிவித்தது.  மேலும் மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், தேர்வுகள் 20 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் அனைத்து உயர்கல்விநிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி கடந்த ஜன.20ம் தேதி நடக்க இருந்த நேரடி எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் உயர்கல்விநிறுவனங்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என்று உயர்கல்விதுறை அறிவித்தது. மேலும் தொற்று கால சூழலில் மாணவர்களின் நலன் கருதி நேரடி தேர்வுகள் தவிர்க்கப்பட்டு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்களுக்கு நவம்பர், டிசம்பர் 2021 பருவத்தேர்வுகள் பிப்.1ம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வு கால அட்டவணை மற்றும் ஆன்லைன் தேர்வு முறையில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பிப்.19ம் தேதி அன்று நடைபெற இருந்த தேர்வுகள் மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடகலை கல்லூரிகளில், நவம்பர், டிசம்பர் 2021 பருவத்தேர்வுகள் நேற்று ஆன்லைனில் தொடங்கியது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் தேர்வு எழுதினர். தொடர்ந்து மார்ச் மாதம் வரை பருவத்தேர்வுகள் நடைபெற உள்ளது. அதேபோல் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகிற 4ம் தேதி ஆன்லைனில் தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை