பொருட்கள் முறையாக வழங்காததால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் எல்என் புரம் ஊராட்சி, பாத்தூர் கிராமத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கு, 262 குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அதில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இந்த ரேஷன் கடையில் முறையாக அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கவில்லை. அதனை, அங்கு வேலை செய்யும் விற்பனையாளர் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார் என புகார் எழுந்தது. இதனால், ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மேற்கண்ட ரேஷன் கடைக்கு அரிசி மூட்டைகள் வந்தன. பின்னர் அந்த மூட்டைகள், மற்றொரு லாரி மூலம் வெளி மார்க்கெட்டுக்கு அனுப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த லாரி மறித்து நிறுத்தினர். ஆனால், லாரி நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இதையடுத்து பொதுமக்கள், தாசில்தார் நடராஜனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் துரை உள்பட அதிகாரிகள், நேற்று ரேஷன் கடைக்கு சென்று அங்கு ஆய்வு செய்தனர். இதையறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரபாபு தலைமையில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு, பொருட்கள் வழங்காத ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கடையில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக வழங்க வேண்டும் என கூறி கோஷமிட்டனர். அவர்களிடம் சமரசம் பேசிய அதிகாரிகள், முறைகேடு குறித்து விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை