பொம்மை முதல்வராக இருக்கிறார் ரங்கசாமி புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

புதுச்சேரி: புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி நிச்சயம் அமையும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுச்சேரி மாநில திமுக அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் இல்ல திருமண விழா, சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.  தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று,  சி.எஸ்.ஆனந்தராஜ்- ஆர்.எஸ்.மீனாட்சி ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தையும், புதுச்சேரியையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது. அதனால்தான் நாங்கள் தமிழகத்தில் கூட்டணி பேசும்போது, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகள் என்றுதான் பேசுவோம். கலைஞருக்கு புதுவை என்றால் ஒரு பாசம் வந்துவிடும். அவருக்கு மட்டுமல்ல, அவரது மகனான எனக்கும் புதுவையை பிடிக்கும். அந்த கொள்கை உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம். அங்கு உதயசூரியன் ஆட்சி மலர்ந்திருக்கிறது. இதை திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையோடு கூறுகிறோம். அப்படி ஒரு திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கும் தேவைதான். இங்குள்ள திமுக எம்எல்ஏக்கள் அவர்களது உணர்வுகளையும், எண்ணங்களையும் கூறினார்கள். உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் அந்த ஆசை உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அந்த வாய்ப்பு கிட்டி இருக்கும். ஆனால், தவறிவிட்டது. அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.இப்போது புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். அதை மறுக்கவில்லை. முதல்வர் என்று ஒருவர் இருக்கிறார். உயரத்தில் உயர்ந்தவர்தான், ஆனால், பொம்மையாக இருக்கிறார், அடி பணிந்து கிடக்கிறார். அவரை குறை சொல்ல விரும்பவில்லை. அவர் நல்லவர்தான். ஆனால், வல்லவராக இல்லையே. கவர்னர் ஆட்டி படைக்கக்கூடிய வகையில் புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது என்று சொன்னால் வெட்கப்பட வேண்டாமா. இதை கண்டு வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா. அடங்கி ஒடுங்கி போய் இருக்கும் நிலையில் ஒரு ஆட்சி நடப்பது புதுவைக்கு மிகப்பெரிய இழுக்காக அமைந்திருக்கிறது. புதுவையில் பரூக் மரைக்காயர், டி.ராமச்சந்திரன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் திமுக ஆட்சி நடந்திருக்கிறது. நிச்சயமாக புதுவையில் திமுக ஆட்சி உதயமாகும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். புதுவையில் வைத்திலிங்கம், நாராயணசாமி ஆகியோரது தலைமையில் திமுகவோடு இணைந்து கூட்டணி ஆட்சி நடந்திருக்கிறது. எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, புதுவையில் மதவாத ஆட்சி உருவாகி விடக்கூடாது என்பதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். விரைவில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, தொடர்ந்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி, எப்படி கூட்டணி, எந்த வகையில் அமையும் என்பது அப்போது முடிவு செய்யப்படும். ஆனால், வெற்றிக்கு இப்போதே அச்சாரமாக நம்முடைய கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும். அண்ணா, கலைஞர் வழியில் உங்களை வழி நடத்தக்கூடிய பொறுப்பை ஏற்றுள்ள நான், உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை ஆற்றி வருகிறேன். எனவே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று பதவி ஏற்றுக்கொள்கின்ற நேரத்தில் மட்டுமல்ல எந்த விதத்திலும், எந்த சூழலிலும் உங்களுக்கு கடமையாற்ற காத்திருக்கிறேன். பாவேந்தர் பாரதிதாசன் கூறியதுபோல் மணமக்கள் வீட்டுக்கு விளக்காய், நாட்டுக்கு தொண்டர்களாக வாழுங்கள் என்று கூறி வாழ்த்துகிறேன். மேலும், பிறக்கும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், ஜெகத்ரட்சகன் எம்பி, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி, மற்றும் துர்கா ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் ஆட்டி படைக்கக் கூடிய வகையில் புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது என்று சொன்னால் வெட்கப்பட வேண்டாமா. …

Related posts

செத்தாலும் ஏர்போர்ட்டில் இனி பேச மாட்டேன்: டெல்லி செல்லும் முன் அண்ணாமலை பேட்டி

பட்டியல் இனத்தவர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

அதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு