பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு

பொன்னேரி, ஜூலை 16: பொன்னேரி நகராட்சியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார். பொன்னேரி நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி நேற்றுமுன்தினம் மாலை ஆய்வு செய்தார். அப்போது, பொன்னேரி நகராட்சியில் பெரியகாவணம், திடக்கழிவு சுடுகாடு, பள்ளம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் வழங்கினார்.

அதில், நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும், அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன் பணிகளை முழுமையாக விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை பெற்று கொண்ட, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தார். இதனை தொடர்ந்து, அனைத்து இடங்களுக்கும் சென்று நேரடியாக பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கோபிநாத், நகர்மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி