பொது தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை

கோவை, மார்ச் 28: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கோவை தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர்.வினோத் ஆர் ராவ், பொள்ளாச்சிக்கு அனுராக் சவுத்ரி, காவல்பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுகிறதா? என்பதையும், விதிகள் மீறப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுத்தல், தேர்தல் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை அலுவலர்களின் செயல்பாடு, சிவிஜில் ஆப் புகார் பதிவு, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, தபால் வாக்குப்பதிவினை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல், வாக்குப்பதிவு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விபரம், பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து பொது பார்வையாளர்களான வினோத் ஆர்.ராவ், அனுராக் சவுத்ரி, காவல் பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

Related posts

கூடலூரில் மனைவி நல வேட்பு நாள் விழா

குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மேல் சாந்தியாக ஜித் நம்பூதிரி தேர்வு

திருச்சூர் அருகே கயிறு இழுக்கும் போட்டியில் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து