பொங்கல் பண்டிகையில் மாடுகளுக்கான மூக்கணாங்கயிறு சலங்கைகள் விற்பனைக்கு குவிப்பு

சேலம் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளுக்கு கட்டப்படும் மூக்கணாங்கயிறு, சலங்கை உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதில் 15ம் தேதியில் மாட்டுப்பொங்கல் அன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அன்றையதினம் மாடுகளை குளிப்பாட்டி வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு, கொம்பில் கட்டப்படும். பின்னர் கரும்பால் தோரணம் கட்டி பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவது வழக்கம்.நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமப்புறங்களில் மாடுகளுக்கு கட்டப்படும் மூக்கணாங்கயிறு, கைப்பிடி கயிறு, கழுத்து கயிறு, சலங்கை உள்பட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் மாடுகளை தேவையான பொருட்களை மாடு வளர்ப்போர், விவசாயிகள் வாங்கிச்செல்கின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மாடுகளுக்கு கட்டப்படும் மூக்கணாங்கயிறு, கழுத்தில் மாட்டப்படும் சலங்கை உள்பட பல்வேறு பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்து கொள்வோம். வழக்கமாக பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே மாடுகளுக்கு தேவையான பொருட்களை விற்பனைக்கு குவிப்போம். அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ள வலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர், வீராணம், மன்னார்பாளையம், பள்ளப்பட்டி, காரிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கில் விவசாயிகள் உள்ளனர். இந்த விவசாயிகள் பெரும்பாலும் அயோத்தியாப்பட்டணத்திற்கு வந்து மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்வார்கள். தற்போது சுமாராக வியாபாரம் நடக்கிறது. பொங்கலுக்கு இரு நாட்களுக்கு முன்பு விற்பனை களைகட்டும். ஒரு கயிறு விலை ₹ 50 முதல் ₹ 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கோலாமாவு, கலர் கோலாமாவும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்