பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்: நாமக்கல், பழனி சந்தைகளுக்கு ஏற்றுமதி

பெரம்பலூர்: பொங்கல் பண்டிகைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளதால் நாமக்கல், பழனி சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 18 ஆயிரம் ஏக்கர் முதல் 23 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. இவற்றை நம்பியே எறையூரில் பொதுத்துறை சர்க்கரை ஆலையும், உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலையும் இயங்கி வருகின்றன. இந்த சர்க்கரையின் பயன்பாடு அதிகரித்து வெல்லத்திற்கு மவுசுகுறைந்து போனதால் அச்சுவெல்லம் தயாரிப்பு பணிகளும் மந்தமானது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் கரும்பு பயிருக்கான சொர்க்க பூமியாக திகழும் காடூர் கிராமத்தில் ஆண்டுக்கு 1000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு வருவதால் ஆலைகளை நம்பியிராமல் இங்கு மட்டும் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணிகளே அசராமல் நடந்து வருகிறது.காடூர் கிராமத்தில் சங்கர், தர்மராஜ், தங்கவேல், நல்லதம்பி, ராஜேந்திரன், கண்ணு உள்ளிட்ட 10விவசாயிகள் தங்கள் வயல்களில் கரும்புக்கான கிரஷர் இயந்திரத்தால் கரும்பு சாற்றை பிழிந்து எடுத்து அகண்ட கொப்பரைகளில் காய்ச்சி பதமான தருணத்தில் அச்சுகளில் வார்த்து அச்சுவெல்லமாகவும், அச்சுகளில் வார்க்காமல் கைகளில் உருட்டிப்பிடித்து உருண்டை வெல்லமாகவும், நாட்டுசர்க்கரையாகவும் 3ரகங்களில் தயாரிக்கின்றனர். வெல்லம் தயாரிப்பு பணிகளில் உதவுவதற்காக பழனி அருகே உள்ள உடுமலைப்பேட்டை பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த சிலர் குடும்பத்தோடு வந்து தங்கி இங்குள்ள விவசாயிகளுக்கு உதவுகின்றனர்.வெல்லம் தயாரிப்பதற்காக 2,000 லிட்டர் அளவு கரும்பு சாறு கிடைத்தவுடன் அவற்றை அகண்ட இரும்பு கொப்பரையில் காய்ச்சுகின்றனர். அப்போது சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் கரும்புச்சாற்றிலிருந்து, தோகையிலிருந்த அழுக்குகள் பொங்கி பொங்கி நுரைக்கும்போது அவற்றை சல்லடை கரண்டிகள் மூலம் வழித்தெடுத்து அகற்றி விடுகின்றனர். பின்னர் கரும்புப்பாகு உரிய பதம் வந்தவுடன் கொப்பரையை கவிழ்த்து பானையில் ஊற்றிவைத்து அச்சில் வார்த்து அச்சுவெல்லமாகவும், பாகு சூடு ஆறிய நிலையில் கைகளில் உருட்டி உருட்டி உருண்டை வெல்லமாகவும் தயாரிக்கின்றனர். தலா 30கிலோ எடை கொண்ட சிப்பமாக பேக்கிங் செய்யப்படுகின்றன.இதையடுத்து நாமக்கல் பிலிகல்பாளையம் விவசாய விற்பனை சந்தைக்கும், பழனி நெய்க்காரப்பட்டி சந்தைக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பிரபலமான மளிகை கடைகளுக்கும் சில்லறையாக விற்பனை செய்கின்றனர். காடூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் பொங்கல் வைப்பதென்றால் காடூர் வெல்லத்தை தேடிவந்து வாங்கி சென்று தான் தெய்வத்துக்கே படையல் செய்கின்றனர்.இதுகுறித்து வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகை என்பதால் ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,200க்கும், அச்சுவெல்லம் ஒருசிப்பம் ரூ.1150 முதல் 1200 வரைக்கும் விலை கிடைக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.1050 முதல் 1100 வரை தான் விலைபோனது. பொங்கலுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் 1 சிப்பம் ரூ.800க்கு குறைந்து விடும். நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் விவசாயிகள் விற்பனை சந்தையில் காடூர் வெல்லத்திற்கு மவுசு அதிகமுள்ளது. இந்த சந்தைக்கு தவறாமல் வரும் கேரள வியாபாரிகள் காடூர் வெல்லம் எப்போது வருமென கேட்டு, காத்திருந்து வெல்லத்தை வாங்கி செல்வார்கள். திருச்சி மாவட்ட வியாபாரிகளும் இங்கு வந்து காடூர் வெல்லத்தை கொள்முதல் செய்து செல்வது வழக்கமாக உள்ளது என்றனர்.25 ஆயிரம் சிப்பம் வெல்லம் உற்பத்திடிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மே மாதம் வரை வெல்லம் தயாரிப்பு பணிகளுக்கான சீசனாக உள்ளது. டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரையிலான தயாரிப்பு பணிகள் பொங்கல் பண்டிகையை கணக்கிட்டே அதிகளவு நடக்கிறது. டிசம்பர் தொடங்கி மே மாதம் வரை காடூரில் உள்ள கரும்பு கிரஷர்கள் மூலம் 25ஆயிரம் சிப்பம் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.கூட்டுறவு ரேஷன் கடைகளில்ரசாயன பொருட்களை கலந்து தயாரிக்கும் சர்க்கரையை விட, அதிக கெடுதல் இல்லாத வெல்லத்தின் அருமை மக்களுக்கு புரிந்து வரும் சூழலில், இது போன்றத்தரமான வெல்லத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன்கடை, கூட்டுறவு அமராவதி விற்பனை அங்காடிகளில் விற்பனை செய்தால் பொதுமக்கள் முழுமையாக பயன்பெற முடியும் என்பது கோரிக்கை….

Related posts

ரகளையில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை: ரயில்வே போலீசார் எச்சரிக்கை

பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்