பைக் வாங்கி தர முடியாத நிலையில் தாயிடம் கோபித்து கொண்டு விஷம் குடித்த கல்லூரி மாணவர் சாவு

விருத்தாசலம், பிப். 14: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள பெரியக்கோட்டுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி கலைச்செல்வி(44). இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் சத்தியவான் (16) என்ற ஒரு மகன் உள்ளனர். சக்கரவர்த்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் கூலி வேலை செய்து கொண்டு ஒரு மகளுக்கு திருமணம் முடித்து 2 மகள்கள் மற்றும் மகன் சத்தியவானுடன் கலைச்செல்வி வசித்து வருகிறார். சத்தியவான் நெய்வேலி அருகே வடலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ மெக்கானிக் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் சத்தியவான் கல்லூரி சென்று வருவதற்கு பைக் வாங்கி தரச் சொல்லி தன் தாயிடம் பல நாட்களாக கேட்டு வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பைக் வாங்கி தர முடியாத நிலையில், பைக் கிடைக்காத ஆத்திரத்தில் தன் தாயிடம் கோபித்துக் கொண்டு கடந்த 7ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்தியவான் தற்கொலைக்கு முயன்று விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த தாய் மற்றும் உறவினர்கள், சத்தியவானை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் இறந்தார். இது குறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் கம்மாபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்