பைக் மீது கார் மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி குடியாத்தம் அருகே சோகம்

குடியாத்தம், ஆக.10: குடியாத்தம் அருகே பைக் மீது கார் மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் துளசிதாஸ்(16). அதேபகுதியை சேர்ந்த நரேஷ்குமார் மகன் அருண்ஹரி பாலாஜி(16). நண்பர்களான இருவரும் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று மதியம் 1 மணியளவில் குடியாத்தம் நகருக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, பைக்கில் சென்று கொண்டிருந்தனர். துளசிதாஸ் பைக்கை ஓட்டிச்சென்றார். அப்போது, குடியாத்தம் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, பேரணாம்பட்டு நோக்கி வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அருண்ஹரிபாலாஜியை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு ெசய்து, கார் ஓட்டி வந்த தட்டக்குட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர் பூபாலன்(38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்களிடம் பைக் கொடுத்து அனுப்பினால் அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை