பைக் சாகசம் செய்தவருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்

 

தாம்பரம், ஆக.5: தாம்பரம் அருகே பைக் ரேசில் ஈடுபட்டவருக்கு ரூ.12,000 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையில் இருந்து தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலை, முல்லை நகர் வழியாக சிடிஓ காலனி பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றில் வாலிபர் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக சத்தம் எழுப்பியபடி, தலைக்கவசம் அணியாமல் பைக் சாகசத்தில் ஈடுபட்டார். இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர்.

இதனை சிலர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலானது. இந்த வீடியோ தாம்பரம் போக்குவரத்து போலீசார் கவனத்திற்கு சென்ற நிலையில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்கு ரூ.1000, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்கு ரூ.1000, அதிக சத்தம் எழுப்பி வாகனம் ஓட்டியதற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதத்தை தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் செல்லப்பாண்டியன் விதித்தார். இதனை தொடர்ந்து, அந்த வாகன ஓட்டியின் பெயர் மற்றும் முகவரி குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரது இருசக்கர வாகனத்தில் விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக சத்தம் எழுப்பும் சைலன்சரை பறிமுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து