பைக்கில் வந்து வாக்களித்த ரங்கசாமி

புதுச்சேரி, ஏப். 20: புதுவையில் நல்லநேரம் பார்த்து பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி என்றார். புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது என்ற நிலை நீடித்தாலும் அவை உடனே சரி செய்யப்பட்டு தற்போது அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று காலையிலேயே ஆர்வமுடன் வந்து தனது வாக்கை 8.45 மணிக்கு பதிவு செய்தார். இதற்காக அவர் தனது வீட்டின் அருகே உள்ள திலாசுபேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனக்கு பிடித்தமான பைக்கில் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களிப்பதற்கு முன்பு தனது கடிகாரத்தில் வழக்கம்போல் நல்ல நேரத்தை பார்த்துவிட்டு வாக்களிக்கும் மறைவிடத்துக்கு சென்று ஜனநாயக கடமையாற்றினார்.

பின்னர் வெளியே வந்த அவரிடம் நிருபர்கள், பேட்டி கேட்க முயன்றபோது, எந்த பதிலும் அளிக்காமல் பைக்கில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு முதல்வர் ரங்கசாமி சென்றார். முன்னதாக அங்கு நிருபர்களிடம் ரங்கசாமி கூறுகையில், புதுவை மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், புதுச்சேரியில் ஆளும் எங்கள் அரசும் செய்துள்ள திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அமைச்சர் நமச்சிவாயம் வெற்றிபெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்று தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

Related posts

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் லேசர் விளக்கு, வெப்ப காற்று பலூன் பறக்க விட தடை: சென்னை காவல்துறை உத்தரவு

ஒரு வருடமாக பணிகளை செய்யாமல் மோதல் மதுரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவரின் செக் பவர் நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி