பேஸ்புக்கில் பழக்கமான பெண்ணுடன் கன்னியாகுமரி விடுதியில் தங்கிய கார் புரோக்கர்: 9 பவுன் நகையை இழந்து காவல்நிலையத்தில் புலம்பல்

கன்னியாகுமரி: கார் புரோக்கருடன், கன்னியாகுமரி வந்த இளம்பெண் விடுதியில் அறையில் தங்கி, அவரின் 9 பவுன் நகையை பறித்து விட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த ஒரு கார் புரோக்கர் (52). இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவருக்கு, தொழில் நிமித்தமாக சமூக வலைதளங்களுடனும் நல்ல தொடர்பு உண்டு. அந்த வகையில் 3 மாதங்களுக்கு முன்பு இவரின் பேஸ்புக்கிற்கு 23 வயதான இளம்பெண் ஒருவர், சத்யா, மதுரை என்ற பெயரில் பிரண்ட்ஸ் அழைப்பு கொடுத்திருந்தார். அவரை தனது சமூக வலை தள கணக்கில் இணைத்துக் கொண்டவர், தொடர்ந்து இளம்பெண்ணுடன் சாட்டிங் செய்ய தொடங்கினார். பின்னர் செல்போன் நம்பரை பரிமாறி வாட்ஸ் அப், டுவிட்டர் வரை இவர்கள் இணைந்தனர். 3 மாத பழக்கம், இளம்பெண்ணிடம் அதிகமான பற்றுதலை கார் புரோக்கருக்கு ஏற்படுத்தியது. மணிக்கணக்கில் உரையாடல்கள் தொடர்ந்தன. கார் புரோக்கருக்கு வாட்ஸ் அப்பில் வித, விதமான போட்டோக்களை இளம்பெண் அனுப்பி வைத்து கிறங்கடித்தார். இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், முதுகு வலி சிகிச்சைக்காக கன்னியாகுமரி செல்ல இருக்கிறேன் என இவர் கூறினார். இதை கேட்டதும் அந்த இளம்பெண், நான் கன்னியாகுமரி சென்றதே இல்லை. அங்கு நடுக்கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க வேண்டும். நானும் உங்களுடன் வரட்டுமா? என கேட்டார். தங்கையாக நினைத்து என்னை நீங்கள் அழைத்து செல்ல வேண்டும் என உருகினார். இவரும் மனமிறங்கி நேரில் பார்த்ததே இல்லை. நாம் நேரில் சந்திப்போம். உன்னை அழைத்து செல்கிறேன் என கூறினார்.அதன்படி நேற்று மதியம் அந்த இளம்பெண் திருநெல்வேலி பஸ் நிலையத்துக்கு வந்து போன் செய்தார். 3 மாதங்கள் போனில் மட்டுமே உரையாடல் நடந்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக் என புகைப்படங்களை பரிமாறிக் கொண்டாலும், இளம்பெண்ணை நேரில் சந்தித்ததும் மிகவும் மனம் உருகிப்போனார். இருவரும் திருநெல்வேலியில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு பஸ் ஏறினர். இரவு 10.30க்கு கன்னியாகுமரி வந்து இறங்கினர். குளுகுளு காற்று, இதமான சாரல் என கன்னியாகுமரி வழக்கம் போல் ரம்மியமாக இருந்தது. கடற்கரை சாலையில் சிறிது தூரம் வாக்கிங் சென்றனர். பின்னர் ஒரு அறை எடுத்து தங்க முடிவு செய்து, எம்.எல்.ஏ. அலுவலக சாலையில் உள்ள விடுதியில் தங்கினர். விடுதி அறைக்கே உணவு வரவழைத்து சாப்பிட்டனர். பின்னர் டி.வி.யில் படம் பார்த்துள்ளனர். நள்ளிரவு 12.30 மணிக்கு உறங்கி விட்டனராம். உறங்குவதற்கு முன், இளம்பெண் கழிவறைக்கு சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் பேஸ்புக்கில் பழகி இளம்பெண்கள் மோசடி செய்த சம்பவங்கள் புரோக்கருக்கு நினைவுக்கு வர தான் அணிந்திருந்த தங்க செயின், மோதிரங்கள் உள்பட சுமார் 9 பவுன் நகையை கழற்றி, பேக்கில் மறைத்து வைத்துக் கொண்டாராம். இருவருமே தனித்தனியாக தான் படுத்திருந்தார்களாம். இவர் மெத்தையில் படுக்க, இளம்பெண் கீழே தரையில் தான் படுத்திருந்தாராம். அதிகாலை 3 மணியளவில் திடீரென கண் விழித்து கார் புரோக்கர் பார்த்த போது அறை கதவு திறந்து கிடந்தது. தரையில் தூங்கி ெகாண்டிருந்த இளம்பெண்ணை காண வில்லை. அதிர்ச்சியானவர் உடனடியாக, தான் நகை வைத்திருந்த பேக்கை பார்க்க அதுவும் மாயமாகி இருந்தது. அய்யோ… எது நடக்க கூடாது என நினைத்தோமோ…. அதுவே நடந்து விட்டதே என கதறியவர் வேக, வேகமாக லாட்ஜ் வரவேற்பறைக்கு வந்து அந்த இளம்பெண் வெளியே சென்றதை பார்த்தீர்களா? என விசாரிக்க உங்களுடன் வந்த பெண், இப்போது தான் பேக்குடன் வெளியே சென்றார் என அங்கிருந்தவர்கள் கூறினர்.உடனடியாக அந்த பகுதிக்கு வெளியே வந்து தேடினார். ஆனால் கிடைக்க வில்லை. இதனால் அதிகாலை 5 மணியளவில் கண்ணீருடன், கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு பரிதாபத்துடன் வந்தார்.அங்கிருந்த காவலரிடம், அண்ணன், தங்கையாக தான் பழகினோம். நீங்கள் எண்ணுவது போல் எல்லாம் கிடையாது. எனக்கு பேரக் குழந்தைகள் எல்லாம் இருக்கிறாங்க. அண்ணன், அண்ணன் என்று அன்போடு பேசி வந்தாள். தங்கையாக தான் நினைத்து அழைத்து வந்தேன். இப்படி ஏமாற்றி விட்டாளே என போலீஸ் கேட்பதற்கு முன்பே எல்லா கதையும் கூறியுள்ளார். என்ன ஐயா… 52 வயது ஆகுது… அறிவில்லையா என்று அவரை செல்லமாக கடிந்து கொண்ட காவல்துறை, இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட இளம்பெண் நம்பரை போலீசார் தொடர்பு கொண்டபோது அந்த செல்போன் நம்பர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு மட்டும் வந்த வண்ணம் உள்ளது….

Related posts

மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை கமுகமாக நடத்த முடியும் : ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து

சீமான் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்.. சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேச்சு உள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு