பேரையூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: போலீசார் சமரசம் செய்தனர்

 

பேரையூர், ஜன. 22: பேரையூர் அருகே, தினந்தோறும் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். பேரையூர் அருகேயுள்ளது கொண்டுரெட்டிபட்டி. இந்த ஊரில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பரிதவித்து வந்துள்ளர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், யூனியன் ஆணையாளர் மற்றும் சேர்மன் ஆகியோரிடம் அவர்கள் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள், நேற்று பேரையூர் – டி.கல்லுப்பட்டி சாலையில் உள்ள கொண்டுரெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த பேரையூர் டிஎஸ்பி இலக்கியா தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலுடன் குடிதண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி