பேருருவினர்-தியாகனூர்

நாங்கள் சென்றிருந்தபோது தியாகனூரில் சிறுமழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையோரம் நிற்கும் நெடிதுயர்ந்த அரசமரம்தான் பேருந்து நிறுத்தம். அதன் முன்னே சிறிய கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பார்வையில் ஒரு பிள்ளையார் கோயில் போன்ற தோற்றம்! இருபுறமும் அமைந்த வயல்களை ஊடறுத்து தார்ச்சாலை நீண்டு செல்கிறது. பெரிதாய் நடமாட்டம் இல்லா அழகிய கிராமத்து சூழல். எப்பொழுதாவது வரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று ஓரிருவரை உதிர்த்து விட்டுச் செல்கிறது. மிதிவண்டிகளிலும் இருசக்கர வாகனங்களிலும் சிலர் கடந்து செல்கின்றனர். நிலவும் அமைதியான சூழலில் அவ்வப்போது அரச மரத்திலிருந்து பறவைகள் எழுப்பும் ஒலியும் சடசடப்பும் கூட பெரிதாய்க் கேட்கின்றன. பெய்து ஓய்ந்திருந்த சிறுமழையில் காற்றின் ஈரப்பதம் கூடி குளுமையை உணரமுடிகிறது.பிற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த எளிய புத்தபிரான் கோயில். சிறிய தாழ்வாரம் ஆதலால் உள்நுழைபவர் சற்றே குனிந்துதான் செல்ல வேண்டும். மழையின் காரணமாக உட்புற சுவர்களில் ஈரம் படிய ஆரம்பித்திருக்கிறது. பூசப்பட்ட சுவரின் நீலவண்ணம் ஆங்காங்கே வெளுப்பு காட்டி தீற்றலாய்த் தெரிகின்றன. உட்புறம் சிறிய அறையில் சற்றே குறைந்த ஒளியில் ஈரம் கலந்த பழமையின் வாசம் அவ்வறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. ஏறக்குறைய அறையின் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை நிரப்பிய வண்ணம் பேருருவினராய் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் இவர்!தலையில் ஞானமடைந்ததைக் குறிக்கும் தீச்சுடர். சுருள் முடி. பாதி மூடிய விழிகள். எடுப்பான நாசி. புன்னகைக்கும் இதழ்கள். நீள் செவிகள். மார்பின் குறுக்கே ஆடை விளிம்பு. தியான ஹஸ்தகரங்கள் என முழுமையான பௌத்த சிற்ப அமைதியைப் பெற்றவராகத் திகழ்கிறார்.தமிழக அளவில் கண்டறியப்பட்டுள்ள புத்தர் சிற்பங்களில் அமர்ந்தநிலை உருவ அமைப்பில் இவரே அளவில் பெரியவர் (சற்றொப்ப ஏழேகால் அடி உயரம்) எனவும் இவர் பிற்சோழர் (கி.பி. 11-12ம் நூற்றாண்டு) காலத்தினராகலாம் எனவும் பௌத்தவியல் அறிஞர் முனைவர் மகாத்மா செல்வபாண்டியன் அவர்கள் சுட்டுவார். இப்பகுதியில் இருந்து அழிந்த பெரும் பௌத்தக் கோயிலின் (விகாரை) மௌன சாட்சியாக இவர் திகழ்கிறார். இக்கோயில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆறகழூர் அருகே தியாகனூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. மேலே போர்த்தி இருக்கும் செவ்வாடை சற்றே எண்ணெய்ப்  பிசுக்குடன் காற்றில் லேசாக அசைந்த வண்ணம் உள்ளது. நல்லோர் ஒருவர் ஏற்றி வைத்த அகல் விளக்கு எண்ணெய் இன்றி கவிழ்ந்து கிடக்க அருகே ஒரு விளக்கு ஏற்றப்படும் நிலையில் உள்ளது. பூசனைப் பொருட்களும் மாக்கட்டி கொண்டு வரையப்பட்ட எளிய சிறு கோலமும் சூழலுக்கு அழகூட்டுகின்றன. சலனம் ஏதுமின்றி உறைந்துவிட்ட புன்னகையுடன் வாசல் நோக்கிய வண்ணம் அமர்ந்திருக்கிறார் சற்றொப்ப 900 ஆண்டுகள் கடந்து விட்ட இப்பழம் புத்தபிரான்!பொன்னம்பலம் சிதம்பரம்…

Related posts

துலாம் ராசியினரின் வாழ்க்கை துணை

தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள்