பேரிடர் மேலாண்மை விதிகளை மீறும் வகையில் தியேட்டர்களில் 100% இருக்கைக்குதமிழக அரசு அனுமதிக்க கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

புதுடெல்லி: தியேட்டர்களில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைவதால் ஊடரங்கு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், அனைத்து மாநிலங்களிலும் சினிமா தியேட்டர்கள் 50 சதவீ இருக்கைகளுடன் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்திலும் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே திரைப்பட துறை கடுமையான இழப்பை சந்தித்திருப்பதால், 100% இருக்கையுடன் தியேட்டர்களை திறக்க திரைத்துறையினர் அனுமதி கோரினர்.பொங்கல் பண்டிகையையொட்டி, புதுப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருப்பதால், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன், உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து இயங்க அனுமதி தமிழக அரசு அனுமதி வழங்கி கடந்த 4ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்கு திரைத்துறையினர் வரவேற்பு அளித்தாலும், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் முதல் முறையாக 100% இருக்கைக்கு அனுமதி தந்ததும் சர்ச்சையானது.இந்நிலையில், தமிழக அரசின் இந்த அனுமதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா தமிழக தலைமைச் செயலாளருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நாடு முழுவதும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, மாநிலங்களில் உள்ள கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் இயங்கும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.ஆனால், தமிழக அரசு கடந்த 4ம் தேதி பிறப்பித்த உத்தரவில், உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தியேட்டர்களில் 100 % இருக்கையுடன் இயங்கலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக இருக்கிறது. ஆதலால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, விதிமுறைகள் எந்தவிதத்திலும் மீறக்கூடாது, நீர்த்துப்போகச் செய்யும் விதத்தில் இருக்கக்கூடாது. அதை அப்படியே செயல்படுத்த வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெளியிட்ட வழிமுறைகளின்படி, தமிழக அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தியேட்டர்களில் 100% இருக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்