பேராசிரியர் செல்போனுக்கு லிங்க் அனுப்பி ₹6.93 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை வேலூரில் பகுதி நேர வேலை தருவதாக கூறி

வேலூர், ஜூலை 8: பகுதி நேர வேலை தருவதாக கூறி வேலூரில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் ₹6.93 லட்சம் பறித்த மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுதம்மஜூந்தர். இவர் வேலூர் தனியார் கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றி வருகிறார். சில வாரங்களுக்கு முன், இவரது செல்போன் வாட்ஸ்அப்பில் ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது. அதில் ‘பகுதி நேர வேலை செய்தால் பணம் வழங்குவதாக’ தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய அவர், தனக்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து தகவல் அனுப்பியவர்கள் கவுதம்மஜூந்தருக்கு போன் செய்து, டெலிகிராம் ஆப்பை டவுன் லோடு செய்யும்படி தெரிவித்தனர். அதன்படி அவர் டவுன்லோடு செய்துள்ளார்.

மேலும் அவர்கள் குறிப்பிட்ட ‘லிங்க்’கில் இணைந்து பணியாற்றினால் இரட்டிப்பு பணம் தருவதாகவும் அதற்காக பணத்தை அனுப்பும்படியும் அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி கவுதம்மஜூந்தர் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ₹6.93 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். ஆனால் பணம் இரட்டிப்பாகவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, முழுமையாக ₹7 லட்சம் கட்டினால் 10 சதவீதம் கூடுதலாக தருவதாக கூறியுள்ளனர். அதனை நம்புவதற்காக தங்களிடம் இருந்த ₹5 லட்சத்தை பேராசிரியரின் வங்கி கணக்கில் அனுப்பி வைப்பதாகவும், அதனை திருப்பி அனுப்பினால் கூடுதலாக 10 சதவீத பணம் கொடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அந்த மர்மஆசாமிகள், பேராசிரியரின் வங்கி கணக்கில் ₹5 லட்சம் அனுப்பி வைத்தனர். அந்த பணத்தை பேராசிரியர் கவுதம்மஜூந்தர் மர்ம ஆசாமிகளின் நம்பருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் அதன்பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் கட்டிய பணமும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமிகளின் நம்பரை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘டெலிகிராம் குரூப்பில் இணையவேண்டாம். அதில் யார் இருக்கிறார்கள், இல்லை என்று தெரியாது. அவர்கள் ஆசை வார்த்தை கூறினால் நம்பாதீர்கள். பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் வேலைவாய்ப்பு எனக்கூறி பண பரிவர்த்தனை நடத்த வேண்டாம். இதில் அதிகளவு இளைஞர்கள், படித்தவர்கள்தான் ஏமாறுகின்றனர். எனவே, பொதுமக்கள் ேதவையின்றி எந்த லிங்க்கையும் தொட வேண்டாம்’ என்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்