பேரழிவு கொள்கையால் பொருளாதார சரிவு மோசமானது இனியாவது நிபுணர்கள் யோசனையை கேளுங்கள்: பாஜ.வுக்கு காங்கிரஸ் அறிவுரை

புதுடெல்லி: ‘பாஜவின் பேரழிவு கொள்கைகளால் பொருளாதார சரிவு மிக மோசமானது. இனியாவது நிபுணர்கள் யோசனையை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும்’ என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த நிதியாண்டில் மைனஸ் 7.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று கூறியதாவது:  கடந்த 40 ஆண்டுகளில் 2020-21ம் நிதியாண்டுதான் பொருளாதாரத்தின் ‘இருண்ட  காலம்’. நடப்பு நிதியாண்டிலும் இதே பாதையில் அரசு பயணிக்கக் கூடாது. தனது தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும். கொள்கைகளை மாற்றியமைக்க முன்வர வேண்டும். பொருளாதார வல்லுநர்கள், எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை கவனிக்க வேண்டும். பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பெரும்பாலும் தொற்றுநோயின் தாக்கத்தால் சரிந்தது என்பதில் சந்தேகமில்லை, ஆனால், பாஜ அரசாங்கத்தின் தகுதியற்ற, திறமையற்ற பேரழிவு கொள்கைகளால் பொருளாதாரம் மிக மோசமாக சரிந்துள்ளது. ஆத்மநிர்பார் போன்ற வெற்று சலுகைகள் பொருளாதாரத்தை தரைமட்டமாக்கி உள்ளன.   ஆனால், இன்னமும் மத்திய நிதியமைச்சர் தனது தவறான மற்றும் பேரழிவு கொள்கைகளை பாதுகாக்கும் வகையிலேயே பேசி வருகிறார். தற்போதைய அரசின் கொள்கைகளால் பொருளாதாரத்தை மீட்கப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. வேலையின்மை தற்போது 11 சதவீதத்தை தாண்டியுள்ளது.அதிகமான மக்கள் வறுமைக்கு கீழே செல்கிறார்கள்.  ஏழைகளும், நடுத்தர மக்களும் படும் இன்னல்களை கவனிக்காமல் இந்த அரசாங்கம் முற்றிலும் உணர்ச்சியற்று இருக்கிறது.. இது தைரியமாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டிய நேரம். நிபுணர்கள் சொல்வதை இனியாவது கேளுங்கள். கடன் வாங்கிச் செலவிடுங்கள். தேவைப்பட்டால் பணத்தை கூடுதலாக அச்சிடுங்கள். மக்களுக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யுங்கள். ரேஷன் பொருட்களை தாராளமாக வழங்குங்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் இப்போதே எடுத்தால்தான், 3வது, 4வது அலை பேரழிவுகளைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.‘இது பிரதமரின் அவலம்’   காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஜிடிபி வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இது பிரதமரின் அவலம்’ என கூறி உள்ளார். இத்துடன் வேலைவாய்ப்பின்மை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை காட்டும் வரைபடம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்