பேரலில் அடைத்து சடலம் புதைப்பு வளசரவாக்கத்தில் தந்தையை கொன்ற மகன், நீதிமன்றத்தில் சரணடைந்தார்: மொட்டையடித்து சுற்றியது அம்பலம்

பூந்தமல்லி: சொத்து பிரச்னையில் தந்தையை கொலை செய்து பேரலில் அடைத்து அடக்கம் செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த அவரது மகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம், ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (80). இவரது மகன் குணசேகரன் (55). காஞ்சனா, பரிமளா, யமுனா என்ற 3 மகள்களும் உள்ளனர். குமரேசனுக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் முதல் தளத்தில், எலக்ட்ரிஷியன் வேலை செய்து வந்த குணசேகரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2வது தளத்தில் மகள் காஞ்சனாவுடன் குமரேசன் வசிக்கிறார்.கடந்த மாதம் 19ம்தேதி குமரேசனை காணவில்லை என்று காஞ்சனா, வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதன்படி போலீசார் விசாரித்தபோது, ‘’தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இதனால் தந்தை குமரேசனை அடித்து கொன்று சடலத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. அத்துடன் தந்தையின் சடலத்தை பேரலில் அடைத்துவைத்து ஆட்டோவில் காவேரிப்பாக்கத்துக்கு எடுத்து சென்று அங்குள்ள நிலத்தில் புதைத்து வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்று தெரிந்தது. இதைத் தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்து காவேரிப்பாக்கத்தில் புதைத்து வைத்திருந்த குமரேசனின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான குணசேகரனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மாலை குணசேகரன் சரணடைந்தார். அப்போது அவர் மொட்டை தலையுடன் இருந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தலையை மொட்டையடித்துவிட்டு பல்வேறு கோயில்களுக்கு சென்று தங்கி அங்கு வழங்கிய அன்னதானத்தை சாப்பிட்டு வந்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதனிடையே குணசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க வளசரவாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவரிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகே, குமரேசனின் கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது