பெரும் நிதி சுமை வழக்குகளில் ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 6 பேர் குழு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசுக்கு பெரும் நிதி சுமைகளை உருவாக்கக்கூடிய வழக்குகளில் ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரும் நிதி சுமைகளை உருவாக்கக்கூடிய வழக்குகள் குறித்து அரசுக்கு உதவுவதற்காக, வழக்கு ஆலோசனை மற்றும் மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது இந்த கூட்டத்தில், 2021-2022ம் ஆண்டின் வரவு செலவு திட்ட உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், அரசுக்கு அதிக நிதி சுமைகளை உருவாக்கக்கூடிய வழக்குகள் குறித்து வழிகாட்டுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் அடங்கிய வழக்கு ஆலோசனை மற்றும் மேற்பார்வை குழுவை அரசு அமைத்துள்ளது. அதன்படி,1. நீதிபதி கே.கண்ணன், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ரயில்வே கோரிக்கைகள் தீர்ப்பாய முன்னாள் தலைவர்    2. வழக்கறிஞர் ஜோசப் பிரபாகர், மறைமுக வரிவிதிப்பு வல்லுநர்    3. வழக்கறிஞர் கே.ரவி, நேரடி வரி விதிப்பு வல்லுநர்    4. வழக்கறிஞர் வி.லஷ்மிநாராயணன், உரிமையியல் வழக்கு வல்லுநர்    5. அரசு கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை,     6. அரசு செயலாளர், சட்ட விவகாரங்கள்.    இந்த குழுவினர், நீதிமன்ற வழக்குகளால் அரசிற்கு ஏற்படும் நிதி சுமைகளை குறைப்பதற்கான உத்திகளை தெரிவித்தல், நீதிமன்ற அமைப்புகளில் பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு அணுகுமுறைகள் மற்றும் வாதங்களை கருத்தில் கொண்டு ஆலோசனை வழங்குவார்கள். குறிப்பிட்ட வழக்கில் வெற்றி வாய்ப்புகளை மதிப்பீடு செய்து இணக்கமாக செல்லுதல் அல்லது வழக்கின் நிலைகளை மாற்றியமைத்தல் முதலியவற்றுக்கான வாய்ப்புகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவார்கள். அதிக நிதிச்சுமையை உருவாக்கக்கூடிய வழக்குகளில் நிதிச்சுமைகளைக் குறைக்கும் பொருட்டு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் தாமதத்திற்கான அபராத வட்டி போன்ற மிகை செலவுகளை தவிர்க்கும் வகையில் நீதிமன்ற ஆணைகளின் நிறைவேற்றத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளையும் செய்வார்கள்.இந்த கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது தொடக்க குறிப்பில், தற்போதைய சூழ்நிலையில் அதிக நிதிச்சுமையை உருவாக்கக்கூடிய வழக்குகள் அனைத்தையும் கூர்ந்து கண்காணிக்கும் பொருட்டு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுவான தரவுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். வழக்கு ஆலோசனை மற்றும் மேற்பார்வை குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை