பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

சிவகங்கை, செப். 14: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு செப்.19 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகள்) பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

சிவகங்கை, அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாக அரங்கில் காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். சிவகங்கை மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்க முடியும். ஒரு கல்லூரியிலிருந்து இரண்டு பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் என்ற 5 தலைப்புகளில் போட்டி நடத்தப்படும். ேபாட்டி தொடங்கும் நேரத்தில் போட்டிக்குரிய தலைப்பினை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அத்தலைப்பில் மட்டுமே பேச வேண்டும்.

எனவே கொடுக்கப்பட்ட அனைத்துத் தலைப்புகளிலும் பேசுவதற்குரிய தயாரிப்புடன் போட்டியில் பங்கேற்க வேண்டும். பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டியில் பங்கேற்கலாம். சென்ற ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாள் போட்டியில் பங்கேற்று முதல் பரிசுபெற்றவர்கள் இவ்வாண்டு நடைபெறும் போட்டியில் பங்கேற்க இயலாது. கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண், 9952280798 என்ற செல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்