பெரியார் பல்கலையில் ஜி 20 சொற்பொழிவு

ஓமலூர், மே 5: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜி20 குறித்த சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. பொருளியல் துறை தலைவர் ஜெயராமன் வரவேற்றார். துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை வகித்து பேசுகையில், ‘ஜி 20 நாடுகள் கூட்டமைப்பு, பொருளாதார ரீதியான, காலநிலை மாற்றம் வளர்ச்சி குறித்து செயல்படுகின்றன. உலக நாடுகளின் வளர்ச்சி என்பது நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, அறிவு பரவல், தொழில்நுட்ப பகிர்வு, சூழல் மேம்பாடு மற்றும் மக்களின் முன்னேற்றம் சார்ந்தது. இந்த ஆண்டு இந்தியா தலைமையில், ஜி20 உலக அளவில் வர்த்தகம், நீடித்த வளர்ச்சி, ஆரோக்கியம், வேளாண்மை மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பேரியல் நிலைகள் செயல்படும்,’ என்றார்.

சிறப்பு விருந்தினராக பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு ஆலோசகரும், சென்னை ஐஐடி பேராசிரியருமான சுரேஷ்பாபு கலந்து கொண்டு, ‘ஜி20 நாடுகளிடையே வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வங்கி கடன் உதவி, கடன் பத்திர நிதி, அரசு, தனியார் இணைப்பு நிதி மற்றும் பசுமை கடன் பத்திரங்கள் மூலமாக வலிமையான உள் கட்டமைப்பு வசதியை உருவாக்க வேண்டும். நமது செயல்பாடுகளை முன்னுரிமை படுத்துதல் மற்றும் நீண்டகால செயல்பாடுகளின் வாயிலாக வேகமான வளர்ச்சியை எட்ட முடியும். அதிக அளவில் இளைஞர்களை கொண்டுள்ள இந்தியா, உலக அளவில் சிறப்பாக செயல்படுகிறது,’ என்றார். இதில், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், பொருளாதார ஆலோசகருடன் கலந்துரையாடினர். உள்தர உத்திரவாத மைய இயக்குனர் யோகானந்தன் நன்றி கூறினார். இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜி20 குறித்த சிறப்பு சொற்பொழிவில், துணைவேந்தர் ஜெகநாதன் பேசினார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை