பெரியார் ஈ.வே.ரா. சாலையின் பெயரை ஓசையின்றி மாற்றிய தமிழக அரசு!: யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த விஷமத்தனம்.. கி.வீரமணி கேள்வி..!!

சென்னை: சென்னையில் இருக்கும் பெரியார் ஈ.வே.ரா. சாலையின் பெயரை தமிழக அரசு ஓசையின்றி மாற்றிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தொடங்கி எழும்பூர் – கீழ்ப்பாக்கம் வழியாக செல்லும் 14 கிலோ மீட்டர் சாலைக்கு பெரியார் ஈ.வே.ரா. சாலை என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகை அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெரியார் ஈ.வே.ரா. சாலை என்பதற்கு பதிலாக கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று மாநில நெடுஞ்சாலைத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே பதிவிடப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை மாநகராட்சியின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் பட்டியலிலும் பெரியார் ஈ.வே.ரா. சாலை என்ற பெயர் இடம்பெறவில்லை. ஆனால் இந்த சர்ச்சை குறித்து இதுவரை சென்னை மாநகராட்சியோ, மாநில நெடுஞ்சாலைத்துறையோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த விஷமத்தனம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 1979ம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு பெரியாரின் பெயரை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சூட்டினார். அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? யாரை திருப்தி செய்ய இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது? இதன் பின்னணி? விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடனடியாக அதை இணையதளத்தில் இருந்து நீக்கி, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி என தெரிவித்தார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்