பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கத்தில் கொசஸ்தலை ஆற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை? உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

சென்னை: பெரியபாளையம் அருகே தாய், தனது 9 வயது மகளுடன் தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றில் இறங்கியுள்ளார். அதில் அவர்கள் அடித்துச்செல்லப்பட்டனர். இருவரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கணவர் இறந்த மன உளைச்சலில் மகளுடன் அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அடுத்த பெரியபாளையம் புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நிரோஷா (30). இவருடைய கணவர் விஜயகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், நிரோஷா தன் மகள்களான தர்ஷினி (12), வினிதா (9) ஆகியோருடன் வசித்து வந்தார். அவர், தங்களுக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். எனினும், கணவர் இறந்தது மற்றும் வருவாய் பற்றாக்குறையால் நிரோஷா தவித்து வந்தார். இந்நிலையில், நிரோஷா தனது செல்போனில் முதல் மகள் தர்ஷினியின் புகைப்படத்தை வைத்துள்ளார். அதில், ‘ஐ ஆம் மிஸ் யூ தர்ஷினி’  என வைத்துள்ளார். அதன் பிறகு நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் வீட்டிலிருந்து தனது 2வது மகள் வினிதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் அணைக்கட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, கொசஸ்தலை ஆற்றின் காட்டாற்று வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு செல்லியம்மன் கோயில் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தாங்கள் அணிந்திருந்த காலணிகளை கழற்றிவிட்டு, கொசஸ்தலை ஆற்றில் மகளுடன் இறங்கி உள்ளார். இருட்டிவிட்டதால் ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்து செல்லப்பட்டார்களா அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா என்பது தெரியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனம் மற்றும் காலணிகளை வைத்து அங்கிருந்த கோயில் பூசாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று உள்ளனர். பின்னர், சிப்காட் தீயணைப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு கடந்து விட்டதால், நேற்று காலை தாய், மகளை தேடும் பணியில் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர். கணவர் இறந்த சோகத்தில் மகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்றார்களா அல்லது காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை