பெரியகுளம், மூணாறு பகுதிகளில் பசுமாடுகளை குறிவைக்கும் புலி, சிறுத்தை: கூண்டுவைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: பெரியகுளம், மூணாறு பகுதிகளில் சிறுத்தை, புலி தாக்கி பசுமாடுகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இந்த புலி மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி வர துவங்கி விட்டன. பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாந்தோப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலை கைலாசநாதர் கோயில் பின்புறம் உள்ள மலைமாதா கரடு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த தெ.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது பசுமாட்டை சிறுத்தை தாக்கி கொன்றது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் தேனி வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுத்தை தாக்கி உயிரிழந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் சிறுத்தை தாக்கியதில் இதுவரை 5க்கும் மேற்பட்ட மாடுகளும், 10க்கும் மேற்பட்ட ஆடுகளும் இறந்துள்ளன. இந்தநிலையில் நேற்று சிறுத்தை தாக்கியதில் பசுமாடு ஒன்று பலியாகி உள்ளது. விவசாய நிலங்களில் கால்நடை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு இது பெரும் சவாலாக உள்ளது. எனவே கால்நடைகளை தொடர்ந்து தாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் உள்ள பெரியவாரை எஸ்டேட் சோலமலை டிவிஷனில், தோட்ட தொழிலாளி கல்பனாவுக்கு சொந்தமான மூன்று மாத கர்ப்பிணி பசு மாடு, தொழிலாளர்கள் வசிக்கும் லயன்ஸ் பகுதி அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பசுவின் அலறல் சத்தம் கேட்டு, தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி அசோக் ஓடி வந்து பார்த்தார். அப்போது பசுவை புலி தாக்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கும் முன், பசுவை தாக்கி புலி கொன்றது. சோலமலை எஸ்டேட் பகுதியில் மட்டும் புலி தாக்குதலால் கொல்லப்பட்ட பசு மாடுகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.தினக்கூலித் தொழிலாளியாக வேலை செய்து வரும் கல்பனா, இரண்டு குழந்தைகளுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார். பசு வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில், தனது பிள்ளைகளின் கல்வி மற்றும் இதர செலவை சமாளித்து வந்தார். தற்போது இந்த வருமானமும் நின்று போனதால் கல்பனா கவலையில் உள்ளார். எஸ்டேட் தொழிலாளர்களான கந்தசாமி, முத்துராஜ் ஆகியோரின் 2 பசு மாடுகளும், மாரி என்பவரின் ஒரு பசுவும் சில மாதங்களுக்கு முன் புலியால் அடித்துக் கொல்லப்பட்டது. முத்துராஜூக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே புலியின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அதுபோல், கேரள மாநிலம் பழைய மூணாறில் தேயிலை தோட்ட பகுதியில் ஷீலா ஷாஜி உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த புலியை கண்டதும், அனைவரும் அலறியடித்து ஓடினர். அவர்களை விரட்டிய புலியிடம் ஷீலா சிக்கி கொண்டார். புலி ஷீலாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்க முயன்றபோது, அவரின் அலறல் சத்தம் கேட்டு புலி மீண்டும் காட்டுக்குள் ஓடியது.புலியின் தாக்குதலில் காயமடைந்த மயங்கி விழுந்த ஷீலாவை, சக ஊழியர்கள் உடனடியாக மூணாறில் உள்ள டாடா ஹை ரேஞ்சு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண் தொழிலாளியை புலி தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயி ஒருவரை சிறுத்தை தாக்க முயன்றபோது, அவர் தற்காப்புக்காக கத்தியால் சிறுத்தையை ெகான்ற சம்பவமும் நடந்தது.இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், பகல்நேரத்திலேயே சிறுத்தை, புலிளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தை, புலிகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும், என்றனர்….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு