பெரம்பலூர் அருகே 261.228 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

 

குன்னம், செப். 21: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் குன்னம் வட்டம் பேரளி கிராம பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி அக்கிராம பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்டவர், காவலர் கௌதம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பேரளி கிராமம், மேற்கு தெரு அய்யாக்கண்ணு மகன் அய்யாசாமி (70) என்பவர் தனது வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்றது தெரிய வந்தது. மேலும் அவரை விசாரணை செய்ததில் வாடகை வீடு ஒன்றை எடுத்து அதில் ஹான்ஸ் 225 கிலோ (300 கிராம் பண்டல் -750 பாக்கெட்கள் ரூ.90 ஆயிரம் ) கூல் லிப் 28.728 கிலோ (208 கிராம் பண்டல் – 285 பாக்கெட்கள் -ரூ.59,280 /-) விமல் பான் மசாலா 7.50 கிலோ (75 கிராம் பண்டல் – 100 பாக்கெட்கள் -ரூ.12,000 /-) என மொத்தம் 1,61,280 ரூபாய் மதிப்புள்ள 261.228 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அய்யாசாமியை கைது செய்த மருவத்தூர் போலீசார் அவரிடமிருந்து மேற்படி குட்கா பொருட்கள் மற்றும் 15,700 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என தெரிவித்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி