பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டியில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க கோரி மக்கள் மறியல்

பெரம்பலூர்,ஆக.15: பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி கிராமத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கவில்லை என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் டிஎஸ்பி பழனிச்சாமி பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டதையடுத்து மறியலை கைவிட்டனர். பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட் பட்டது தம்பிரான்பட்டி கிராமம். இவ்வூரில் உள்ள செஞ்சேரி-செட்டிக்குளம் சாலையில், பொம்மனபாடி தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் லிட் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரேஷன்கடை உள்ளது. நேற்று (14ம் தேதி) இந்த ரேஷன் கடையில் பயோ மெட்ரிக் முறை மெஷின் வேலை செய்யாததால் காத்திருந்த பொது மக்களிடையே சலசலப்பு ஏற்றட்டது.

இதனால் ரேஷன் கடையில் பணி புரியும் ஊழியர் ராகவன் என்பவர், மிஷினை சரி செய்த பிறகு தான் பொருட்கள் வழங்கப்படும், அதுவரை பொறுத்திருங்கள் எனக் கூறியுள்ளதாகக் கூறப் படுகிறது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பொது மக்கள், ஏற்கனவே ரேஷன் பொருட்களை வாங்காமல் விடுபட்டிருந்த பொது மக்கள் ஆத்திரம் அடைந்து காலை 10.15மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த செல்வமணி(50) தலைமையில் 35பெண்கள் உள்பட 50 பேர் செஞ்சேரி-செட்டிக்குளம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து தம்பிரான் பட்டி கிராமத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனிச்சாமி மற்றும் பெரம்பலூர் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் தம்பிரான்பட்டி, ரேஷன் கடையின் பயோமெட்ரிக் மெஷின் பழுது குறித்து டிஎஸ்பி பழனிச்சாமி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதன் பேரில், கைகளால் எழுதி பொருட்கள் வழங்குவதற்கு கலெக்டர் கற்பகம் அனுமதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தம்பிரான்பட்டி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு கைகளால் எழுதி ரேஷன் பொருட்கள் வழங்கப் பட்டன. இந்த மறியல் போராட்டத்தால் செஞ்சேரி- செட்டிக்குளம் சாலையில் முக்கால் மணிநேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை