பெண் குரலில் பேசி, பழகி வயதானவரை மயக்கி ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல்: சென்னையில் வாலிபர் அதிரடி கைது

தண்டையார்பேட்டை: வயதானவரிடம் பெண் குரலில் பேசி மயக்கி, அவரது படங்களை பெற்று ஆபாசமாக சித்தரித்து ரூ.7 லட்சம் கொடுக்கா விட்டால் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சியைச் சேர்ந்தவர் முகமது அல்தாப் (24). சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவர், மர்ம நபர் ஒருவர், தனது தந்தையிடம் செல்போனில் பெண் குரலில் பேசி பழகியதாகவும், பின்னர் தந்தையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்து ரூ.7 லட்சம் கேட்டு, பணம் கொடுக்கவில்லை என்றால் தந்தையின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அப்துல்லா (32) என்பதும், இவர் அல்தாப் தந்தையிடம் டெலிகிராம் செயலி மூலம் பெண் குரலில் பேசி பழகி பெண் என நம்ப வைத்து, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பெற்றதும், பின்னர் அந்த படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.இதை தொடர்ந்து, முத்தியால்பேட்டை போலீசார் பாதிக்கப்பட்ட நபர் பணம் தருவதாக கூறி மண்ணடி பகுதிக்கு வரவழைத்து, அங்கு வந்த அப்துல்லாவை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அல்தாப்பின் தந்தையிடம் முதலில் டெலிகிராம் செயலி மூலம் பெண் குரலில் பேசி அப்துல்லா பழகியுள்ளார். இதை நம்பிய அவர் பெண் என்று கடந்த சில நாட்களாக பேசி வந்துள்ளார். முதலில் ஒழுங்காக பேசி பின்னர் ஆபாச வார்த்தைகளை கூறி அவரை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் புகைப்படங்களை பெற்றுள்ளார். அந்த படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பிறகுதான் ஆண் ஒருவர், பெண் குரலில் பேசி தன்னை ஏமாற்றி உள்ளது அல்தாப் தந்தைக்கு தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அவரது மகனிடம் கூறி புகார் கொடுக்க கூறியுள்ளார். பின்னர் போலீசார் அப்துல்லாவை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு செல்போன் மற்றும் 2 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தற்போது, இதுபோன்ற நூதன மோசடியில் சில கும்பல் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பெண் குரலில் ஆபாசமாக பேசுவதும், பெண்கள் படத்தை மார்பிங் செய்து அனுப்பியும் தங்கள் வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல் சம்பவங்கள் பல நடக்கிறது. ஆனால் ஒரு சிலர் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்ற காரணத்தால் புகார் அளிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதை பயன்படுத்தியே பலர் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது