பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?: உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அம்பான எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்துவிட்டு, அவரை எய்த வில்லான சிறப்பு டிஜிபியை ஏன் இதுவரை சஸ்பெண்ட் செய்யவில்லை என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.,யான கே.ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கையும் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை நியாயமாக விசாரித்து தீர்த்து வைக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது.  பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டிஜிபியால் ஏவப்பட்ட அம்பான எஸ்.பியை தான் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆனால், அவரை எய்த வில்லான டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்படாதது ஏன், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் காட்டப்படுகிறது. அவர் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டப்படுகிறதா? இந்த வழக்கில் மக்கள் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, வழக்கை நேர்மையாக நடத்த வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. 10க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு டிஜிபியை சந்தித்து, சிறப்பு டிஜிபியை ராஜினாமா செய்யக்கோரி கடிதம் கொடுத்துள்ளனர். இருந்தும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ல்  சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அப்போது சிறப்பு டிஜிபி சார்பில் ஆஜரான வக்கீல், விசாகா குழுவில் உள்ள ஒருவர் எவ்வித விசாரணையும் இல்லாமல் தன்னை தூக்கிலிடவேண்டுமென வாட்ஸ் அப்பில் விமர்சிக்கிறார் என்று வாதிட்டார். இதையடுத்து விசாரணையை நீதிபதி வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு